குன்னூர்–மேட்டுப்பாளையம் இடையே குட்டியுடன் சாலையை கடந்த காட்டுயானைகள் வாகன ஓட்டிகள் பீதி

குன்னூர்–மேட்டுப்பாளையம் இடையே குட்டியுடன் காட்டுயானைகள் சாலையை கடந்தன. இதனால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்.

Update: 2019-04-13 22:15 GMT

குன்னூர்,

குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார், கே.என்.ஆர். நகர், மரப்பாலம் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குட்டியுடன் 2 காட்டுயானைகள் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் அவ்வப்போது சாலைகளிலும் உலா வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மரப்பாலம் அருகில் நேற்று சாலையை கடக்க காட்டுயானைகள் முயற்சித்தன. ஆனால் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்ததால், சாலையோரத்தில் காத்து நின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் வாகன போக்குவரத்தை நிறுத்தினர். அதன்பின்னர் சிறிது நேரம் கழித்து குட்டியுடன் 2 காட்டுயானைகளும் சாலையை கடந்து சென்றன. தொடர்ந்து வாகன போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்த காட்டுயானைகள் அடிக்கடி சாலையில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் பீதி அடைந்து உள்ளனர்.

இதேபோன்று நேற்று அதிகாலை 4 மணியளவில் கோத்தகிரி அருகே உள்ளத்தாட்டி பகுதியில் காட்டுயானை ஒன்று சாலையில் உலா வந்தது. 3 கிலோ மீட்டர் தூரம் சாலையிலேயே நடந்து சென்று மிளிதேன் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் அந்த காட்டுயானை புகுந்தது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்து தேயிலை தோட்டம் வழியாக கப்பட்டி அருகில் லாங்வுட் வனப்பகுதிக்குள் சென்றது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, மிளிதேன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்குள் காட்டுயானை இதுவரை வந்தது இல்லை. தற்போது முதன்முறையாக காட்டுயானை புகுந்துள்ளது. மீண்டும் காட்டுயானை ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்