கொடுமுடியில் காவிரி ஆற்றில் மூழ்கி மாணவன் பலி தீர்த்தம் எடுக்க வந்தபோது பரிதாபம்

கொடுமுடிக்கு தீர்த்தம் எடுக்க வந்தபோது காவிரி ஆற்றில் மூழ்கி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

Update: 2019-04-13 22:00 GMT

கொடுமுடி,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ராமேகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி சுமித்ரா (வயது 40). இவர்களுக்கு நந்தகுமார் (15) என்ற மகனும், கிருபா (13) என்ற மகளும் உள்ளனர். இதில் நந்தகுமார் கொடுவாய் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து முடித்து உள்ளான். இந்த நிலையில் ராமேகவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த கோவில் திருவிழாவையொட்டி அந்த பகுதியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தம் எடுக்க நேற்று ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தார்கள். அப்போது அவர்களுடன் சுரேசும், அவருடைய மகன் நந்தகுமாரும் வந்தனர்.

கொடுமுடி மணல்மேடு பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் பக்தர்களுடன் நந்தகுமார் குளித்தான். அப்போது அவன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் நந்தகுமார் ஆற்றில் மூழ்கினான். இதனை கவனித்த பொதுமக்கள் அவனை காப்பாற்ற முயன்றனர். எனினும் அவர்களால் முடியவில்லை. இதில் அவன் ஆற்றில் மூழ்கி இறந்தான். உடனே இதுகுறித்து கொடுமுடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஆற்றில் மூழ்கிய நந்தகுமாரின் உடலை மீட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த மாணவன் நந்தகுமாரின் உடலை பார்த்து அவனுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்