திருச்சி விமான நிலையத்தில் ரூ.23¾ லட்சம் தங்க நகைகள் பறிமுதல் 4 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை

திருச்சி விமான நிலையத்தில் ரூ.23¾ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-04-12 22:30 GMT
திருச்சி, 

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் மதியம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் ஒன்று வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, ஒரு பெண் பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது அதில் தலா 150 கிராம் எடை கொண்ட 2 தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் ஒரு ஆண் பயணியின் உடைமையை சோதனை செய்த போது, 150 கிராம் எடை கொண்ட தங்க சங்கிலியை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண், சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி (வயது 45) என்பதும், அந்த ஆண் சென்னையை சேர்ந்த முகமதுசலீம் (46) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 2 தங்க கட்டிகள், ஒரு தங்க சங்கிலி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சத்து 40 ஆயிரம் ஆகும். மேலும் ராஜேஸ்வரி, முகமதுசலீம் ஆகியோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மலேசியாவை சேர்ந்த விவேகானந்தன் மற்றும் சுசிலாதேவி ஆகிய 2 பேரும் தங்கள் கைப்பையில் 308 கிராம் தங்க நகைகளை மறைத்து கடத்திவந்தது. கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 33 ஆயிரம் ஆகும். இதையடுத்து அதிகாரிகள் அந்த நகைகளை பறிமுதல் செய்து 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மட்டும் மொத்தம் ரூ.23 லட்சத்து 73 ஆயிரம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்