கடற்கரை சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை : மும்பை ஐகோர்ட்டு உத்தரவு
கடற்கரை சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
மும்பை மெரின் லைன்ஸ் பகுதியில் இருந்து காந்திவிலி வரை ரூ.12 ஆயிரம் கோடி செலவில் கடற்கரை சாலை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து மீனவ அமைப்பினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் கடற்கரை சாலை திட்டத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என மீனவ அமைப்பினர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
தனியார் தொண்டு நிறுவனத்தினர், கடற்கரை சாலை திட்டத்துக்காக டாடா கார்டன் பகுதியில் உள்ள 200 மரங்களை வெட்டக்கூடாது என மாநகராட்சிக்கு உத்தரவிடுமாறு கூறியிருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் " நமது வருங்கால சந்ததியினர் குருவியையும், பட்டாம்பூச்சிகளையும் பார்க்க முடியாமல் போகலாம். விவசாய நிலங்களை அழித்து கட்டிட பகுதிகளாக மாற்றி வருகிறோம். ஏற்கனவே நம்மால் முடிந்த வரை கடல் பகுதியை சேதப்படுத்திவிட்டோம். இதற்கு மேலும் கடல் வளத்தை அழிக்காமல் இருப்போம் " என்று தெரிவித்தனர்.
மேலும் கடற்கரை சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தவும், டாடா கார்டன் பகுதியில் மரங்களை வெட்டவும் வருகிற 23-ந் தேதி வரை இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.