சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் பாண்டியாறு நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா? சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் பாண்டியாறு நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்யப்படுமா? என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

Update: 2019-04-11 21:45 GMT
கூடலூர்,

கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மழைக்காலமாக உள்ளது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் கூடலூர் பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் நீர்நிலைகள் வறண்டு விடுகின்றன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெப்பத்தை தணிக்க சமவெளி பகுதியில் இருந்து நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆனால் கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகளின் நுழைவு வாயிலாக திகழும் கூடலூர் பகுதியில் சுற்றுலா திட்டங்கள் எதுவும் இல்லை.

இதனால் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பெயரளவுக்கு தொடங்கிய சில திட்டங்கள் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூடலூர் பகுதியில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் குறைந்த அளவு நீர் ஓடி பாண்டியாறு வழியாக கேரளாவுக்கு பாய்கிறது. மழைக்காலத்தில் நீர் கரைபுரண்டு ஓடுவதும், கோடை காலத்தில் மிக குறைவாக நீர் ஓடுவது வழக்கம். பாண்டியாற்றில் நீர்வீழ்ச்சியும் உள்ளது. இது சுற்றுலா பயணிகள் யாருக்கும் சரிவர தெரியாது. மழைக்காலத்தில் நீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், நீர்வீழ்ச்சி உள்ள இடத்துக்கு யாரும் செல்ல முடியாது. ஆனால் கோடை காலத்தில் நேரில் சென்று கண்டு களிக்கலாம்.

கூடலூர் பகுதியில் சுற்றுலா திட்டங்கள் இல்லாத நிலையில், கோடை காலத்தில் மட்டும் பயன்படுத்தும் வகையில் பாண்டியாறு நீர் வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு களிக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கூடலூர்- கோழிக்கோடு சாலையின் குறுக்கே பாண்டியாறு செல்கிறது. மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி கேரளாவுக்குள் பாய்கிறது. கூடலூர்- கேரளா செல்லும் சாலையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் பாண்டியாறு நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை கூடலூருக்கு இன்னும் அதிகரிக்கும். மேலும் கூடலூர் பகுதியில் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும். எனவே அதிகாரிகள் இதற்கு பரீசிலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்