வீடு வீடாக சென்று இன்று முதல் வாக்காளர்களுக்கு “பூத்சிலிப்” வினியோகம் கலெக்டர் ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக சென்று ‘பூத் சிலிப்’ வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஷில்பா தெரிவித்தார். இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2019-04-11 21:30 GMT
நெல்லை, 

நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. தற்போது ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரி ஆகிய சட்டசபை தொகுதிகளில் இந்த பணி முடிவடைந்து உள்ளது. தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம் ஆகிய 4 தொகுதிகளில் பணிகள் முடிந்துள்ளது.

இதுதவிர நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை மற்றும் ராதாபுரம் ஆகிய தொகுதிகளிலும், தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகளிலும் வேட்பாளர் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி இன்று (அதாவது நேற்று) தொடங்கி உள்ளது. இந்த முறை வி.வி.பாட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் எந்திரமும் இணைக்கப்பட்டு இருப்பதால் இந்த பணி தாமதம் ஆகிறது. வி.வி.பாட் எந்திரத்தில் வேட்பாளர்களின் சின்னங்கள் பதிவிட்டு, அது சரிபார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக பெல் நிறுவனத்தில் இருந்து நெல்லை தொகுதிக்கு 11 என்ஜினீயர்களும், தென்காசி தொகுதிக்கு 12 என்ஜினீயர்களும் வந்துள்ளனர்.

இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு முழுமையாக வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த பணியில் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகின்றனர். அங்கு பதிவாகும் காட்சிகள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக பார்வையிடப்படும்.

நெல்லை மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் 14 ஆயிரத்து 666 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே 2 கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதில் விடுபட்டவர்கள் மற்றும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு நாளை (சனிக்கிழமை) 2-வது கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது.

வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்கு வசதியாக அவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய ‘பூத் சிலிப்’ வழங்கப்படும். அவை அனைத்தும் அச்சடித்து கொண்டு வரப்பட்டு உள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வாக்காளர்களுக்கு அந்தந்த வாக்குச்சாவடி அலுவலர் மூலம் வீடு, வீடாக சென்று வழங்கப்படும்.

மேலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் 73,081 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் 55,305 பேருக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையும் வழங்கப்படும். அடையாள அட்டை கிடைக்கப்பெறாதவர்கள் தேர்தல் ஆணையம் கூறிஉள்ள 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை, பூத் சிலிப் உடன் எடுத்து வந்து ஓட்டு போடலாம்.

நெல்லை மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடியே 31 லட்சத்து 76 ஆயிரத்து 689 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் ரூ.1.10 கோடி திருப்பி வழங்கப்பட்டு உள்ளது. ரூ.98.70 லட்சம் வருமான வரித்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

பணம் பதுக்கி வைத்திருப்பதாகவும், வாக்காளர்களுக்கு பணம் வினியோகிப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அது தொடர்பாக ஆய்வு செய்ய வருமான வரித்துறை அதிகாரிகள் குழு தயார் நிலையில் உள்ளது. புகார் வரும் பகுதிக்கு அவர்களை பறக்கும் படை அதிகாரிகள் அழைத்துச் செல்வார்கள்.

கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை 1,012 புகார்கள் வந்துள்ளன. அதில் 1,006 புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளோம். 6 புகார்கள் பெய்யானது என்பது தெரியவந்தது. இதுதவிர சி.வி.ஜி. மூலம் 213 புகார்களும், டோல்பிரி எண் மூலம் 57 புகார்களும் வந்துள்ளன.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் 24 வயது உடைய பெண் போட்டியிடுவதாக கூறுவது தொடர்பாக, ஏற்கனவே வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு 25 வயது 10 மாதங்கள் ஆகிறது என்பது உறுதி செய்யப்பட்டதால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இந்த தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு இலக்கை நோக்கி தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளோம். எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலரும், தென்காசி தொகுதி தேர்தல் அலுவலருமான முத்துராமலிங்கம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்