காட்பாடி அருகே கிராம மக்கள் விரட்டியதால் கிணற்றில் விழுந்த வடமாநில வாலிபர்கள் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
காட்பாடி அருகே திருடர்கள் என நினைத்து கிராம மக்கள் விரட்டியதால் வட மாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் கிணற்றில் தவறி விழுந்தனர். இதில், படுகாயம் அடைந்த 3 பேரையும் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
காட்பாடி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
காட்பாடியை அடுத்த கரசமங்கலம் பகுதியில் மோட்டார் சைக்கிள் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்சன் (வயது 19), ஸ்மித் (28), சர்வேந்தர் (23) ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர். 3 பேரும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் 3 பேரும் கரசமங்கலம் கிராமம் வழியாக நடந்து சென்றுள்ளனர். அக்கிராம மக்கள் ‘வடமாநிலத்தை சேர்ந்த 3 பேரும் தங்கள் பகுதியில் திருட வந்துள்ளனர்’ என்று நினைத்து அவர்களை நிறுத்தி மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது 3 வாலிபர்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதையடுத்து 3 வாலிபர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அவர்களை கிராம மக்கள் விரட்டி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது வடமாநில வாலிபர்கள் ஊரின் ஒதுக்குப்புறத்தில் தண்ணீரற்ற தரைமட்ட பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்தனர். இதில், 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.
இதுகுறித்து காட்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் இறங்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரையும் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து என விசாரணை நடத்தி வருகின்றனர்.