மகன்களை தொடர்ந்து பா.ஜனதாவுக்கு தாவ தயாரான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள்
மகன்களை தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும், தேசியவாத காங்கிரசை சேர்ந்த முன்னாள் துணை முதல்- மந்திரி விஜய்சிங் மொகிதே பாட்டீலும் பா.ஜனதாவில் சேர போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மும்பை,
நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் அகமதுநகர் தொகுதியில் சீட் மறுக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதா கிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல் பா.ஜனதாவில் இணைந்தார்.
இதேபோல தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்- மந்திரி விஜய்சிங் மொகிதே பாட்டீலின் மகன் ரஞ்சித்சிங் மொகிதே பாட்டீலும் பா.ஜனதாவுடன் தன்னை இணைத்து கொண்டார். கட்சியில் சேர்ந்த இருவரையுமே பா.ஜனதா நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக அறிவித்தது. சுஜய் விகே பாட்டீல் அகமத் நகர் தொகுதியிலும், ரஞ்சித்சிங் மொகிதே பாட்டீல் சோலாப்பூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் ராதா கிருஷ்ண விகே பாட்டீல் தனது மகனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும் என தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க ராதா கிருஷ்ண விகே பாட்டீலும், விஜய்சிங் மொகிதே பாட்டீலும் இன்னும் சில நாட்களில் மராட்டியத்துக்கு பிரசாரம் செய்ய வரும் பிரதமர் மோடி முன்னிலையில் பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர்கள் பா.ஜனதாவில் இணைந்தால் காங்கிரஸ் கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.