அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது பள்ளிபாளையத்தில் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம்
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்று பள்ளிபாளையத்தில் ஜி.கே.வாசன் தேர்தல் பிரசாரம் செய்தார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பஸ்நிலையத்தில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்ற மணிமாறனை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். இதற்காக திறந்த வேனில் சென்றார். அப்போது அவருடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியும் சென்று வாக்கு சேகரித்தார். தேர்தல் பிரசாரத்தில் ஜி.கே.வாசன் பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சி காலத்தில் தினசரி 8 மணி நேரம் தான் மின்சாரம் இருந்தது. இதனால் நெசவாளர்கள், சிறு தொழிற்சாலை நடத்துபவர்கள், மில்கள், வியாபாரிகள், பொதுமக்கள் சொல்ல முடியாத துயரம் அடைந்தனர்.
தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் தங்கமணியின் சீரிய முயற்சியால் தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது. மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டுமே தடையின்றி 24 மணிநேரமும் மின்சாரம் கிடைக்கிறது.
குமாரபாளையம் தொகுதியில் குமாரபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம், பள்ளிபாளையத்தில் ஆர்.டி.ஓ. அலுவலகம், எஸ்.பி.பி. காலனியில் மேம்பாலம், காவிரி ஆற்றில் மேம்பாலம் என பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது. பெண்கள் முன்னேற, நாடு முன்னேற, அ.தி.மு.க. வேட்பாளர் மணிமாறனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில், நகர செயலாளர் வெள்ளிங்கிரி, தொகுதி நிர்வாகி சுப்பிரமணி, த.மா.கா. நிர்வாகி வெங்கட்ராமன், தே.மு.தி.க. பொங்கியண்ணன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.