மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ‘2 கோடி சாலைப்பணியாளர்கள் நியமனம்’ - முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி பேச்சு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 2 கோடி பேர் சாலைப்பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசினார்.

Update: 2019-04-10 22:00 GMT
தாடிக்கொம்பு,

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமிக்கு, முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தாடிக்கொம்பு பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அதன்படி பூதிப்புரம், உண்டார்பட்டி, விராலிப்பட்டி, காப்பிளியபட்டி, மறவபட்டி மற்றும் தாடிக்கொம்பு ஆகிய இடங்களில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் பேரூராட்சி பகுதிகளுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் விரிவுப்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கான வேலை நாட்களை 150 நாட்களாக அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி. வரியின் கீழ் கொண்டு வரப்படும்.

ஏழை-எளிய மக்களுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். கிராமப்புற பெண்களுக்கு நிபந்தனையின்றி ரூ.50 ஆயிரம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தமிழகத்தை சேர்ந்த 2 லட்சம் பேர் உள்பட நாடு முழுவதும் 2 கோடி இளைஞர்கள் சாலைப்பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள். 60 வயதான அனைவருக்கும் மாதாந்திர ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பா.ஜனதா அரசு, 15 தொழில் அதிபர்களுக்காக ரூ.5 லட்சம் கோடியை தள்ளுபடி செய்தது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தமிழகத்தில் நடைபெற உள்ள 22 சட்டசபைக்கான இடைத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களை தி.மு.க. கைப்பற்றும். அ.தி.மு.க. அரசுக்கு எதிராக வாக்களித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விரைவில் தீர்ப்பு வர உள்ளது. இதனால் தற்போதைய அ.தி.மு.க. அரசு விரைவில் கவிழும். தமிழகத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவி ஏற்பார்.

இவ்வாறு அவர் பேசினார். பிரசாரத்தில் திண்டுக்கல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், தாடிக்கொம்பு பேரூர் செயலாளர் நாகப்பன், தாடிக்கொம்பு பேரூர் அவைத்தலைவர் சுப்பையா, மாவட்ட பிரதிநிதிகள் இன்னாசி, ராஜூ, சின்னத்தம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்