காரைக்காலில் இருந்து சென்னைக்கு சென்ற சொசுகு பஸ் கவிழ்ந்து விபத்து; டிரைவர் உள்பட 14 பேர் காயம்
காரைக்காலில் இருந்து சென்னைக்கு சென்ற சொசுகு பஸ் புதுவையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் உள்பட 14 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி,
காரைக்காலில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ்சை சென்னையை சேர்ந்த டிரைவர் சண்முகசுந்தரம் (வயது 48) ஓட்டினார். பஸ்சில் 13 பயணிகள் இருந்தனர். அந்த பஸ் நேற்று அதிகாலை புதுச்சேரிக்கு வந்தது.
புதுவை ராஜீவ்காந்தி சிலை அருகே வந்தபோது சாலையின் நடுவே உள்ள தடுப்புக்கட்டையில் பஸ் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் சண்முகசுந்தரம் படுகாயமடைந்தார். பயணிகளுக்கு லேசான காயமும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டது.
பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ் சாலையின் ஓரமாக அகற்றப்பட்டது. விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைந்தது. விபத்து தொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.