1½ லட்சம் லிட்டர் பால் மோசடி: வேலூர் ஆவின் அதிகாரிகள் 5 பேர் பணியிடை நீக்கம்

வேலூர் ஆவின் நிறுவனத்தில் 1½ லட்சம் லிட்டர் பால் மோசடி நடந்த சம்பவத்தில் 4 அதிகாரிகள் உள்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Update: 2019-04-10 22:30 GMT
வேலூர், 

வேலூர், திருவண்ணாமலை மாவட்ட பால்கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கிவருகிறது. வேலூர் மாவட்டத்தில் ஒருநாளைக்கு 3.83 லட்சம் லிட்டர் பால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.33 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

அதில் 2 லட்சம் லிட்டர் பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 72 ஆயிரம் லிட்டர் பால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பாக்கெட் பாலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 60 ஆயிரம் லிட்டர் பால்பவுடராக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 2 லட்சம் முதல் 3 லட்சம் கிலோ வரையில் நெய் தயாரிக்கப்படுகிறது.

இவை தவிர ஆவின் மூலம் குல்பி ஐஸ், மோர், லஸ்ஸி ஆகியவையும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதால் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் குல்பி ஐஸ், 12 ஆயிரம் மோர் பாட்டில், 3 ஆயிரம் லிட்டர் மோர் பாக்கெட், 3 ஆயிரம் லஸ்ஸி பாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பால்உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. கடந்த 6 மாதங்களில் சுமார் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சென்னை தலைமை அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கடந்த 6 மாதங்களில் பால்கொள்முதல் செய்ததில் 1½ லட்சம் லிட்டர் பால் கணக்கில் வராதது உறுதியானது. அதைத்தொடர்ந்து இதுசம்பந்தமாக வேலூர் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகளாக பணிபுரியும் ஹரிரெட்டி, மகேஸ்வரராவ், பாலாஜி, சேம் கிப்சன், ஊழியராக வேலைபார்க்கும் அப்பாத்துரை ஆகிய 5 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆவின் பொதுமேலாளர் கோதண்டராமன் உத்தரவிட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஆவின் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்