ஈரோட்டில் பயங்கரம்: வடமாநில வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொடூர கொலை கணவன்– மனைவி உள்பட 3 பேர் கைது

ஈரோட்டில் வடமாநில வாலிபரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவன்–மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-04-10 23:45 GMT

ஈரோடு,

பீகார் மாநிலம் வைசாலி அருகே உள்ள ஹாஜிபூர் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவருடைய மனைவி சசிகலா (22). இவர்கள் 2 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரோடு வில்லரசம்பட்டி முத்து மாணிக்கம் நகருக்கு வந்தனர். பின்னர் வாடகை வீட்டில் தங்கி இருந்து 2 பேரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தனர்.

இந்த நிலையில் கணவன்–மனைவி 2 பேரும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரெயிலில் பீகார் சென்றனர். அப்போது இவர்களுக்கு பீகார் மாநிலம் கிழக்கு சாம்ரான் அருகே உள்ள கல்யாண்பூர் பகுதியை சேர்ந்த நித்தீஷ்குமார் என்பவர் அறிமுகம் ஆனார். நித்திஷ்குமார் திண்டுக்கல் மாவட்டம் கோட்ட நத்தம் நாச்சியார் பட்டி 4 ரோடு பகுதியில் தனது தாயுடன் தங்கி இருந்து அங்குள்ள ஒரு தண்ணீர் சுத்தப்படுத்தப்படும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

ரெயிலில் ஏற்பட்ட பழக்கத்தின்போது நவீன்குமார், நித்திஷ்குமாரிடம் ‘ஈரோட்டுக்கு வந்தால் நாங்கள் நல்ல வேலை வாங்கி தருகிறோம். அதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்’ என்று ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதைத்தொடர்ந்து அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வந்தனர். பின்னர் நவீன்குமாரின் பேச்சை கேட்டு நித்திஷ்குமார் ஈரோடு வந்தார்.

ஆனால் அவர்கள் சொன்னபடி நித்திஷ்குமாருக்கு வேலை வாங்கி கொடுக்காமல், அசாம் மாநிலம் தமாஜி மாவட்டத்தை சேர்ந்த ராகுல் தத்தாவுடன் சேர்ந்து நித்திஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் அவர்கள் அந்த வீடியோ காட்சிகளை வாட்ஸ்–அப் மூலம் அவருடைய தாய்க்கு அனுப்பி வைத்து, ரூ.1 லட்சத்தை தங்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தும்படி மிரட்டியும் உள்ளனர்.

இதனால் பயந்து போன நித்திஷ்குமாரின் தாய் இதுபற்றி வேடசந்தூர் உட்கோட்டம் குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நித்திஷ்குமாரின் தாயார் செல்போனுக்கு வந்த வாட்ஸ்–அப் எண்ணை துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை தொடங்கினர்.

இதற்கிடையில் அந்த செல்போன் எண் சிக்னல் ஈரோடு பகுதியை காட்டியதால் குஜிலியம்பாறை போலீசார் ஈரோடு விரைந்தனர். பின்னர் போலீசார் ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் நுழைந்து சோதனை செய்தனர். அப்போது ஒரு வீட்டின் முன்பு ரத்தக்கறை வடிந்திருந்ததை பார்த்த போலீசார் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது வீட்டிற்குள் இருந்து ஒருவர் வெளியே ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டிற்குள் இருந்த கணவன்–மனைவியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் நவீன்குமார் மற்றும் அவருடைய மனைவி சசிகலா என்பதும், தப்பி ஓடியது ராகுல் தத்தா என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வீட்டில் ஒரு மூலையில் கிடந்த 3 சாக்கு மூட்டைகளை அவிழ்த்து பார்த்தனர். அப்போது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்த மூட்டைக்குள் கை, கால், உடல் என துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் நித்திஷ்குமாரின் உடல் வைக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நித்திஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பணம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த கணவன்–மனைவி உள்பட 3 பேரும் சேர்ந்து நித்திஷ்குமாரை நேற்று முன்தினம் இரவு கொலை செய்து, அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அதை மூட்டையில் கட்டி வைத்திருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் நவீன்குமாரையும் அவரது மனைவி சசிகலாவையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்துக்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு இருந்தது. கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதற்கிடையே தப்பி ஓடிய ராகுல் தத்தாவை போலீசார் கருங்கல்பாளையம் பகுதியில் மடக்கி பிடித்து கைது செய்தனர். வடமாநில வாலிபர் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்