வி.ஐ.டி.யில் பி.டெக். படிப்பிற்கான நுழைவுத்தேர்வு தொடங்கியது வேந்தர் ஜி.விசுவநாதன் பார்வையிட்டார்
வி.ஐ.டி.யில் பி.டெக். பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 163 மையங்களில் தொடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று நடந்த நுழைவுத்தேர்வை வேந்தர் ஜி.விசுவநாதன் பார்வையிட்டார்.
காட்பாடி,
வி.ஐ.டி.யில் பி.டெக். பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு (2019-20) வி.ஐ.டி. வேலூர் வளாகத்தில் பி.டெக். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், பயோ டெக்னாலஜி, பயோ மெடிக்கல் என்ஜினீயரிங், கணினி அறிவியல், இன்பர்மேசன் டெக்னாலஜி, கெமிக்கல் என்ஜினீயரிங் உள்ளிட்ட 17 வகையான பட்டப் படிப்புகளுக்கும், வி.ஐ.டி. சென்னை வளாகத்தில் பி.டெக். சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், பேஷன் டெக்னாலஜி மற்றும் 7 வகையான பட்ட படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடந்தது.
இதேபோல் வி.ஐ.டி. போபால் வளாகத்தில் பி.டெக். எலக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல், ஏரோ ஸ்பேஸ், உள்ளிட்ட 9 வகையான பட்டப் படிப்புகள், வி.ஐ.டி. அமராவதி (ஆந்திரபிரதேசம்) வளாகத்தில் பி.டெக் கணினி அறிவியல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் உள்ளிட்ட 8 வகையான பட்ட படிப்புகளுக்கும் நேற்று நுழைவுத்தேர்வு தொடங்கியது.
இந்த தேர்வுகள் வருகிற 21-ந் தேதி வரை துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் 120 முக்கிய நகரங்கள் உள்பட 124 நகரங்களில் 163 மையங்களிலும் கணினி முறையில் நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் 11.30 மணி வரையிலும், பிற்பகல் 12.30 மணி முதல் 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் என 3 பிரிவாக இந்த நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க 1 லட்சத்து 62 ஆயிரத்து 412 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்திலிருந்து 29 ஆயிரத்து 122 மாணவ, மாணவிகளும், உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து 17 ஆயிரத்து 469 பேர், தமிழ்நாட்டிலிருந்து 16 ஆயிரத்து 583 பேர், தெலுங்கானா மாநிலத்திலிருந்து 16 ஆயிரத்து 27 மாணவ- மாணவிகள் மற்றும் மராட்டிய மாநிலத்திலிருந்து 14 ஆயிரத்து 798 பேர் நுழைவுத் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
பெருநகரங்களை பொறுத்தவரை ஐதராபாத்திலிருந்து 13 ஆயிரத்து 574 பேர், விஜயவாடாவிலிருந்து 9 ஆயிரத்து 815 பேர், டெல்லியிலிருந்து 9 ஆயிரத்து 94 பேர், சென்னையிலிருந்து 7 ஆயிரத்து 943, கோட்டாவிலிருந்து 6 ஆயிரத்து 5, போபாலில் இருந்து 1, 654, வேலூரிலிருந்து 2 ஆயிரத்து 694 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.
முதல் நாளான நேற்று வேலூர் வி.ஐ.டி.யில் நடந்த நுழைவுத்தேர்வை வி.ஐ.டி. வேந்தர் ஜி.விசுவநாதன் பார்வையிட்டார்.
அப்போது துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன் ஆகியோர் உடனிருந்தனர். நுழைவுத் தேர்வு முடிவுகள் இந்த மாதம் (ஏப்ரல்) இறுதியில் www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.