வானவில் : சொகுசுக் கப்பலில் சுற்றுலா செல்லலாமே
பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்துவிட்டன.
பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்துவிட்டன. இனி குழந்தைகளுடன் ஏதாவது சுற்றுலா பகுதிக்கு சென்று வரலாம். அப்படி திட்டமிடுபவர்கள் வித்தியாசமான பயணத்தை மேற்கொள்ளுங்கள். வழக்கமான பயணம், உறவினர் வீட்டில் தங்குவது உள்ளிட்டவற்றை தவிர்த்து தனியாக குடும்பத்தினருடன் வேறு எவரது தொந்தரவுமின்றி பயணம் மேற்கொள்ளுங்கள்.
இத்தகைய சுற்றுலா பயணம் நிச்சயம் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆண்டுதோறும் ஓடியாடி உழைத்து, களைத்துப் போனவர்களுக்கு ஒரு வார சுற்றுலாப் பயணம் நிச்சயம் புத்துணர்வைத் தரும். புதிய முயற்சியாக சொகுசு கப்பலில் பயணம் மேற்கொள்ளலாம். குரூயிஸ் ஷிப் எனப்படும் இத்தகைய சொகுசு பயணக் கப்பல் இந்தியாவிலும் முக்கிய பகுதிகளில் இயக்கப்படுகிறது. இதனால் உள்நாட்டு சுற்றுலாவை சொகுசு கப்பலில் குடும்பத்துடன் பயணித்து களிக்கலாம்.
அங்ரியா ( மும்பை முதல் கோவா வரை)
இந்தியாவின் முதலாவது சொகுசு பயணிகள் கப்பல். மும்பையிலிருந்து கோவா வரை பயணிக்கலாம். இந்தக் கப்பலில் நடனமாடும் தளம், ஸ்பா, ரெஸ்டாரென்ட், நீச்சல் குளம், சொகுசு தனியறைகள் உள்ளிட்டை உள்ளன. இந்த கப்பலில் 400 பேர் வரை பயணிக்க முடியும். இந்த கப்பலில் மொத்த பயண நேரம் 14 மணி நேரமாகும். டிக்கெட் விலை ரூ.7 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை. மும்பையிலிருந்து மாலை 4 மணிக்குப் புறப்படும் கப்பல் மறு நாள் காலை 9 மணிக்கு கோவாவை சென்றடையும். இந்த கப்பல் பயணத்தின்போது சூரிய அஸ்தமனம் மற்றும் சூரிய உதயத்தைக் கண்டு ரசிக்க முடியும்.
ஓபராய் மோட்டார் வெஸல் விரின்டா குரூயிஸ் (ஆலப்புழை ஆற்றுப் பகுதி)
கேரள மாநிலத்தில் கடலும் ஆறும் கலக்கும் முகத்துவார பகுதி அதிகம். பேக் வாட்டர் எனப்படும் இப்பகுதியில் கப்பல் செல்லும் அளவுக்கு ஆழமானவை. ஓபராய் மோட்டார் கப்பலில் பயணித்து கடவுளின் சொந்த நாடான கேரள மாநிலத்தின் நீர் பகுதியின் அழகை ரசிக்கலாம்.
எம்.வி.மகாபாஹூ (பிரம்மபுத்திரா நதி)
பிரம்மபுத்திரா நதியில் இயக்கப்படுகிறது சொகுசு கப்பலான எம்.வி.மகாபாஹூ. அசாம் மாநிலத்தின் அழகை இந்த சொகுசுக் கப்பலில் பயணித்தபடி ரசிக்கலாம். பால்கனி, நீச்சல் குளம் ஆகியனவும் உள்ளன.
எம்.வி.பரமஹம்சா (சுந்தர வனக் காடுகள்)
சுந்தர வனக் காடுகளிடையே ஓடும் காட்டாற்றில் இயக்கப்படுகிறது எம்.வி. பரமஹம்சா சொகுசு கப்பல். மாங்குரோவ் காடுகளில் ஆற்றில் செல்லும்போது அதன் அழகை ரசிக்க முடியும். வித்தியாசமான வன விலங்குகள் குறிப்பாக ஸ்வாம்ப் புலி, உப்பு நீர் முதலை மற்றும் வெளிநாட்டுப் பறவைகளை பார்த்து ரசிக்க முடியும்.
அலகநந்தா (கங்கை ஆறு)
வாரணாசி பகுதியில் கங்கை ஆற்றில் இயக்கப்படும் சொகுசுக் கப்பலில் அலகநந்தாவும் ஒன்றாகும். வாரணாசியில் இயக்கப்பட்ட முதலாவது சொகுசுக் கப்பலும் இதுவே. சூரிய அஸ்தமனம், சூரிய உதயத்தை கண்டு ரசிப்பதோடு கங்கைக்கு ஆர்த்தி எடுப்பதையும் ரசிக்கலாம்.
இந்தியாவில் இதுபோன்ற பயணிகளுக்கான சொகுசுக் கப்பல் போக்குவரத்தை மங்களூர், கோவா, கொச்சி, மும்பை, சென்னை உள்ளிட்ட துறைமுக பொறுப்புக் கழகங்கள் மேற்கொண்டுள்ளன.