தி.மு.க.வில் நாளை இணைய திட்டமிட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டில் வருமானவரி சோதனை
தி.மு.க.வில் நாளை இணைய திட்டமிட்டிருந்த முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது.
கடலூர்,
கடலூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன். இவர் கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு அ.தி.மு.க.வில் கடலூர் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சர் எம்.சி.சம்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பனும், அவரது ஆதரவாளர்களும் தனி அணியாக செயல்பட்டு வந்தனர்.
இதற்கிடையே அவர் தனது ஆதரவாளர்களுடன் அ.தி. மு.க.வில் இருந்து விலகி நாளை (வியாழக்கிழமை) தி.மு.க.வில் இணைய திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணி அளவில் அவரது வீட்டுக்கு தேர்தல் பறக்கும் படை தாசில்தார் கீதா மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென வந்தனர். அப்போது வீட்டில், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.
இதையடுத்து பறக்கும் படை தாசில்தார் கீதா, பாதுகாப்புக்காக போலீசாரை வரவழைப்பதற்காக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு வீட்டுக்கு வெளியே காத்து நின்றார். நண்பகல் 1-15 மணி அளவில் போலீசார் வந்ததும் வருமானவரித்துறை அதிகாரிகள் மட்டும் அய்யப்பனின் வீட்டுக்குள் சென்றனர். வீட்டு கதவை உள்புறமாக பூட்டிவிட்டு தங்களது சோதனையை தொடங்கினர். வருமானவரி சோதனையையொட்டி அவரது வீட்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அவரது வீட்டில் சோதனை நடந்து கொண்டு இருக்கும் போது, அவரது ஆதரவாளரான கடலூர் மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பிரகாஷின் மாமனார் கிருஷ்ணமூர்த்தியின் வீடு உள்ள செம்மண்டலம் சேர்மன் சுந்தரம் நகருக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் 4 பேர் மதியம் 2-10 மணிக்கு சென்றனர்.
அங்கு பிரகாஷின் மாமனார் வீட்டில் இருந்த 2 கார்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஆனால் கார்களில் எதுவும் சிக்கவில்லை. பின்னர் 4 அதிகாரிகளும் செம்மண்டலத்தில் உள்ள அய்யப்பனின் வீட்டுக்கு வந்தனர். இதற்கிடையே மாலை 4 மணி அளவில் வருமான வரி அதிகாரிகள் சோதனையை முடித்து விட்டு அய்யப்பனின் வீட்டில் இருந்து வெளியே சென்றனர். இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்பட்டதாக தெரியவில்லை.
வருமான வரி சோதனை பற்றி முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் கூறியதாவது:-
என்னுடைய ஆதரவாளர்களுடன் வேறு கட்சிக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் நான் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தேன். இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர், எங்கள் வீட்டில் நிறைய பணம் இருப்பதாகவும், தேர்தலுக்கு அதை பயன்படுத்த போவதாகவும் பொய்யான தகவல் கொடுத்து உள்ளனர். அதன் பேரில் இன்றைக்கு அதிகாரிகள் வந்து சோதனை நடத்தி விட்டு, எதுவுமே இல்லையென கூறிவிட்டு சென்று உள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.