பிளக்ஸ் பேனர்களை அகற்றக்கோரிய வழக்கு: தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு
பிளக்ஸ் பேனர்களை அகற்றக்கோரிய வழக்கில் தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரையை சேர்ந்த பிரபாகர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடைவிதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல்வேறு ரெயில்நிலைய வளாகங்களில் அரசியல் தலைவர்கள், தனியார் அமைப்பு தலைவர்களை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர்களை தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் வைத்துள்ளனர். இதனால் ரெயில் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ரெயில்வே துறைக்கு சொந்தமான சுவர்களிலும் விளம்பரங்களை வரைந்துள்ளனர். எனவே அனைத்து ரெயில் நிலையங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றவும், சுவர் விளம்பரங்களை அழிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது இதுதொடர்பாக தென்னக ரெயில்வே சார்பில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் ஏற்கனவே கோர்ட்டு உத்தரவின்பேரில் இதுவரை பதில் அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ரெயில் நிலையங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளது குறித்து தென்னக ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் வருகிற 15–ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.