தேர்தல் வந்தவுடன் விவசாயிகளை பற்றி பிரதமர் மோடி கவலைப்படுகிறார் திருவாரூரில், உதயநிதி ஸ்டாலின் பேச்சு

5 ஆண்டு கால ஆட்சியில் கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறார் என திருவாரூரில், உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

Update: 2019-04-09 23:15 GMT
திருவாரூர்,

திருவாரூர் வாளவாய்க்கால் ரவுண்டானாவில் திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் பூண்டி .கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி தனது ஆட்சி காலத்்தில் வெளிநாட்டிற்கு சென்ற செலவு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி. ஆனால் கஜா புயலுக்கு உரிய நிவாரணம் கொடுக்கவில்லை. பணமதிப்பிழப்பு மூலம் புதிய இந்தியா பிறக்க போகிறது என்றார். எதுவும் நடக்கவில்லை. அவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். 5 ஆண்டு கால ஆட்சியில் கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறார்.

தி.மு.க கூட்டணியின் தேர்தல் அறிக்கைகள் கதாநாயகனாக திகழ்கிறது. கதாநாயகன் இருந்தால் வில்லன் வர வேண்டும். அவர்கள் யார் என்பது மக்களுக்கே தெரியும். அவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம். அவர்களை பற்றி இழிவாக பேசிய அன்புமணி ராமதாஸ்் இன்று அவர்களுடன் கூட்டணி வைத்துள்ளார்.

நாங்கள் சினிமாவில் தான் நடிக்கிறோம். ஆனால் அன்புமணி ராமதாஸ், நிஜ வாழ்்க்கையில் நடிக்கிறார். அன்புமணி ராமதாஸ், தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் 12 விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஒரு விவாதத்தில் கூட தர்மபுரி தொகுதி பற்றி பேசவில்லை. அவர் என்னை விவாதத்துக்கு கூப்பிடுகிறார். அதற்கு நான் தயார்.

கருணாநிதி மகன் என்ற தகுதியை தவிர வேறு எதுவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என கூறுகிறார். அடிப்படையில் இருந்து பதவியில் படிப்படியாக வளர்ந்து இன்று தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கி தந்தவர் கருணாநிதி. அரசு மருத்துவக்கல்லூரி, மத்திய பல்கலைக்கழகம் மட்டுமல்ல, ஓடாத தேரை ஓட வைத்தவர் கருணாநிதி என்பது அனைவருக்கும் தெரியும். எனவே திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வராசு ஆகியோரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கொரடாச்சேரி கமலாபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். 

மேலும் செய்திகள்