நாடாளுமன்ற தேர்தல்: புதுவையில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுவையில் வருகிற 16–ந்தேதி மாலை முதல் 18–ந்தேதி வரை மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-04-08 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை அரசு வருவாய்துறை சார்பு செயலாளர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து கள் மற்றும் சாராயக்கடைகள், மதுபானக் கடைகள் அத்துடன் இணைக்கப்பட்டுள்ள பார்கள், மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டல்கள் வருகிற 16–ந் தேதி மாலை 5 மணி முதல் 18–ந் தேதி மாலை 5 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23–ந்தேதி அன்று காலை முதல் மாலை 5 மணி வரையிலும் மூடப்பட வேண்டும்.

புதுவை மாநிலத்துக்குட்பட்ட ஏனாம் (ஆந்திரா) பிராந்தியத்தில் வருகிற 11–ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே ஏனாம் பகுதியில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கள் மற்றும் சாராயக்கடைகள், பார்கள், மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 11–ந் தேதி மாலை 5 மணி வரை மூடப்பட வேண்டும்.

புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தின் அருகில் உள்ள கேரள மாநிலத்தில் வருகிற ஏப்ரல் 23–ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே வருகிற 21–ந் தேதி முதல் 23–ந் தேதி மாலை 5 மணி வரை மாகி பிராந்தியத்தில் உள்ள கள் மற்றும் சாராயக்கடைகள், பார்கள், மதுபானம் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டல்கள் மூடப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்