பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை நம்ப மக்கள் தயாராக இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை நம்ப மக்கள் தயாராக இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2019-04-08 22:00 GMT
திருச்செந்தூர்,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் திருச்செந்தூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம்-சென்னை இடையே எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளது. விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, விவசாயிகளின் போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க நினைத்த தமிழக அரசுக்கு சரியான பாடம் கற்பிக்கப்பட்டு உள்ளது. இதனை தமிழக அரசு மேல்முறையீடு செய்தாலும், அங்கும் மக்களுக்கு நிச்சயம் உரிய நியாயம் கிடைக்கும்.

அறந்தாங்கியில் பெரியாரின் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார். தேர்தல் நேரத்தில் தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. அவர்களுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் பா.ஜனதாவை மக்கள் துரத்தி அடிப்பார்கள்.

பா.ஜனதா 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது, விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டத்தை அறிவித்து இருந்தால், வரவேற்று இருப்பேன். அப்போது வறுமையில் வாடிய விவசாயிகள் ஆண்டுதோறும் சராசரியாக 21 ஆயிரம் பேர் தற்கொலை செய்தனர். அப்போது விவசாயிகளுக்கு எந்த உதவிக்கரமும் நீட்டவில்லை. இப்போது தேர்தல் யுக்தியாக பா.ஜனதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப தயாராக இல்லை.

அதேபோன்று நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டை பல ஆண்டுகளாக நிறைவேற்றாத பா.ஜனதா, இதனை தற்போது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது வேடிக்கையானது. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தி.மு.க. தொடர்ந்து போராடும். ஆனால் ஆட்சியில் இருந்தபோதே நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியாத அ.தி.மு.க., இனி நீட் தேர்வுக்கு விலக்கு பெறுவதாக கூறினாலும், மக்கள் அதனை நம்ப தயாராக இல்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்களில் அதனை நடத்த வேண்டாம் என்று தெளிவாக காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூறி உள்ளார்.

இதேபோன்று தேர்தலுக்கு பிறகு நதிநீர் இணைப்புக்கு தனி ஆணையம் அமைப்பதாக பா.ஜனதா கூறுவதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையை சூப்பர் ஹீரோ என்று கூறுகின்றனர். உண்மையில் நடக்க வாய்ப்பு இல்லாததைத்தான் திரைப்படங்களில் சூப்பர் ஹீரோக்களாக காண்பிப்பார்கள். எனவே பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் கூறி அனைத்தும் நிஜத்தில் நடக்க வாய்ப்பே இல்லை.

இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.

முன்னதாக திருச்செந்தூர் நகர பஞ்சாயத்து பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் கனிமொழி எம்.பி. திறந்த ஜீப்பில் சென்று, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அவருடன் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்