இந்தியா வல்லரசு நாடாக மாற பா.ஜனதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் மொரப்பூரில் ஜி.கே.வாசன் பேச்சு

இந்தியா வல்லரசு நாடாக மாற மத்தியில் பா.ஜனதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்று மொரப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் ஜி.கே.வாசன் பேசினார்.

Update: 2019-04-08 23:00 GMT
தர்மபுரி,

தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கோவிந்தசாமியும், அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வி.சம்பத்குமாரும் போட்டியிடுகிறார்கள். அவர்களை ஆதரித்து அ.திமு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் மொரப்பூரில் நேற்று இரவு பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. இதேபோல் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் கடைக்கோடியில் உள்ள ஏழை, எளிய மக்களின் பிரச்சினைகளை அறிந்து அவற்றை தீர்ப்பதற்கான பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான முறையில் ஆட்சியை நடத்தி வருகிறார்கள். இந்தியாவின் பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சியை பெற்று உள்ளது.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்தியா வளர்ச்சிப்பாதையில் செல்லவும், வலிமையும் பாதுகாப்பும் கொண்ட வல்லரசு நாடாக மாற மோடி தலைமையிலான பா.ஜனதா ஆட்சி மீண்டும் மத்தியில் அமைய வேண்டும். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் நமது கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே மத்திய சுகாதாரத்துறை மந்திரியாக இருந்து பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியவர்.

கடந்த 5 ஆண்டுகளில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். அவர் மீண்டும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு சென்றால் தர்மபுரி மாவட்ட மக்களின் பிரச்சினைகளை எடுத்து கூறி இந்த தொகுதிக்கு மேலும் பல வளர்ச்சி திட்டங்களை பெற்று தருவார். எனவே அவரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.

கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெகதீசன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் தம்பி ஜெய்சங்கர், பா.ஜனதா மாவட்ட தலைவர் வரதராஜன், பா.ம.க. மாநில துணைத்தலைவர் அரசாங்கம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ,தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்