உரிய ஆவணங்கள் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¾ கோடி பறிமுதல் துப்பாக்கி, தோட்டாக்களும் சிக்கின

கோவையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஏ.டி.எம். எந்திரத்தில் நிரப்ப கொண்டு சென்ற ரூ.1¾ கோடி பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி, தோட்டாக்களும் சிக்கின.

Update: 2019-04-08 22:15 GMT

கணபதி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க, ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பறக்கும்படை அதிகாரி ராஜேஷ் வரி மற்றும் அதிகாரிகள் கோவை கணபதியை அடுத்த கண்ணப்பநகர் போலீஸ் சோதனை சாவடி அருகே நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஜீப்பை மறித்து சோதனை செய்தனர். அதற்குள் கட்டுக்கட்டாக ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.500 நோட்டுகள் இருந்தன.

இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அந்த ஜீப்புக்குள் இருந்தவரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த சச்சின்குமார் (வயது 30) என்பதும், சிங்காநல்லூரில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் ஜீப்பில் உள்ள ரூ.1 கோடியே 76 லட்சத்தை கணபதி, சங்கனூர் பகுதியில் உள்ள ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாகவும் சச்சின்குமார் தெரிவித்தார்.

ஆனால் அவரிடம் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. அத்துடன் அவரிடம் ஒரு துப்பாக்கியும், 5 தோட்டாக்களும் இருந்தன. அதற்கும் உரிமம் இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.1 கோடியே 76 லட்சம் மற்றும் துப்பாக்கி, 5 தோட்டாக்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த தனியார் நிறுவன உரிமையாளர் ரூ.1 கோடியே 76 லட்சத்துக்கான ஆவணங்களை கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை அவரிடம் திரும்ப ஒப்படைத்தனர். ஆனால் துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களுக்கு உரிமம் இல்லாததால் அவை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்ப கொண்டு சென்றாலும் அதற்கான ஆவணங்கள் தேவை. எவ்வளவு பணம் கொண்டு சென்றாலும் உரிய ஆவணத்துடன் எடுத்துச்செல்ல வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்