காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் - நமச்சிவாயம் உறுதி

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் நமச்சிவாயம் உறுதியளித்தார்.

Update: 2019-04-07 23:15 GMT
வில்லியனூர்,

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து காங்கிரஸ் மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் வில்லியனூர் பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று மண்ணாடிப்பட்டு, திருபுவனை, நெட்டப்பாக்கம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் திறந்தவெளி வாகனத்தில் சென்று, நேற்று வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான மடுகரை மந்தைவெளியில் அமைச்சர் நமச்சிவாயம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-

நமது வேட்பாளர் வைத்திலிங்கம் அரசியல் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். தொடர்ந்து 40 ஆண்டுகள் அரசியல் பணியாற்றி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளார். முதல்-அமைச்சர், அமைச்சர், சபாநாயகர், எம்.எல்.ஏ., எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

அவருக்கு காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும். புதுவை மாநிலத்திலேயே அதிக வாக்குகளை நெட்டப்பாக்கம் தொகுதி பெறவேண்டும். அதன் மூலம் மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவு கட்டி, ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமையும்.

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளை, கண்டிப்பாக நமது அரசு நிறைவேற்றும். நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், புதுவை மாநில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும்.

தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். இவையெல்லாம் நடக்கவேண்டு என்றால் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்