சிவகங்கை அருகே வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் வைத்திருப்பதாக புகார்: அ.ம.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக கூறப்பட்ட புகாரின் பேரில், அ.ம.மு.க. பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியை அடுத்த செம்புலியான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் அ.ம.மு.க. மாவட்ட இளைஞரணி இணை செயலாளராக இருக்கிறார். மேலும் கீழப்பூங்குடியில் செல்போன் ரீசார்ஜ் கடை வைத்துள்ளார். இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்து இருப்பதாக தேர்தல் பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
அதைத்தொடர்ந்து அவரது வீட்டில் காரைக்குடி வருமானவரித்துறை உதவி இயக்குனர் சதீஸ்பாபு, வருமானவரி அலுவலர் ஆண்டி உள்பட 4 அதிகாரிகளும், சிவகங்கை தாசில்தார் கண்ணன், பறக்கும் படை தாசில்தார்கள் சேகர், காசி ஆகியோரும் நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தீவிர சோதனை செய்தனர்.
கண்ணனின் வீட்டின் அருகில் உள்ள ஓட்டு கொட்டகை மற்றும் கீழப்பூங்குடியில் உள்ள அவரது கடையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது பணம் எதுவும் சிக்கவில்லை.
இதுகுறித்து கண்ணன் கூறியதாவது;– என்னுடைய வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாகவும், அதன் அடிப்படையில் சோதனை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 3 மணி நேரம் நடத்திய சோதனையின் போது பணம் எதுவும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.