‘என்னை தேடி வரும் கூட்டம் காசு வாங்கி வருவதில்லை’ தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு

என்னை தேடி வரும் கூட்டம் காசுவாங்கி வருவதில்லை என்று கோவை பிரசார கூட்டத்தில் கமல்ஹாசன் கூறினார்.

Update: 2019-04-07 22:45 GMT

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் ஆர்.மகேந்திரனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை கருமத்தம்பட்டி, சோமனூர், சூலூர் கலங்கள் பிரிவு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:–

கோவை, பொள்ளாச்சி பகுதிகளில் பாலியல் வன்கொடுமை தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. ஆளுகிற அரசு இது போன்ற சம்பவங்களை கண்டிக்காமல், ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று கேட்கின்றனர். இதைதட்டி கேட்டால் எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். இவ்வாறு அரசியல் ஆதாயம் தேடி தேடித்தான் தமிழகம் சீர்குலைந்து கிடக்கிறது. பெண்ணை மானபங்கம் செய்பவர்களை கண்டிக்காமல் அலட்சியமாக செயல்படும் இந்த அரசை அகற்றுங்கள்.

மக்களாகிய நீங்கள் நன்றாக தேடிப்பார்த்து நல்ல ஒரு கட்சிக்கு வாக்களியுங்கள். என்னை தேடி வரும் கூட்டம் காசுவாங்கி வருவதில்லை. தமிழக முதல்–அமைச்சருக்கு நான் ஒரு சவால் விடுகிறேன். காசு கொடுக்காமல் இதுபோன்ற கூட்டத்தை உங்களால் கூட்ட முடியுமா? எருமை மாட்டை குளிப்பாட்டும் இடத்தில் கூட கூட்டம் கூடும். நடிகர், நடிகைகள் வரும் இடத்தில் கூட்டம் கூடாதா என்கிறார்கள். அவர்கள் தங்களது தலைவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நடிகர்கள் என்பது மறந்துவிட்டார்கள் போலும்.

சில பகுதிகளில் நான் செல்லும்போது ஆரத்தி எடுக்கின்றனர். உடனே அவர்கள் பகுத்தறிவு எங்கே போயிருச்சு? என்று கேட்கின்றனர். ஆரத்தி எடுப்பவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். அவ்வளவுதான். அதற்கும், பகுத்தறிவுக்கும் சம்பந்தம் கிடையாது. உங்களை மட்டும் தான் நம்புகிறேன். எங்களை வளர வழிவிடுங்கள். எங்களுக்கு வழி காட்டுங்கள். உங்களை நாங்கள் மேன்மைபடுத்துகிறோம்.

தற்போது நான் ஒரு புத்தகமாக உங்கள் முன் நிற்கிறேன். அதை வெளியிடுபவர்கள் நீங்கள்தான். மறந்துவிட வேண்டாம். ஏப்ரல் 18–ந் தேதி தவறவிட்ட நமது உரிமையை மீட்க மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி குரல் எழுப்ப செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை சூலூர் கலங்கள் பிரிவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதைக் கண்ட அவர் ஆம்புலன்சுக்கு வழிவிடுங்கள் எனக்கூறி சிறிது நேரம் தனது பேச்சை நிறுத்தினார்.

ஆம்புலன்ஸ் சென்ற பிறகு தனது பேச்சை தொடர்ந்த கமல்ஹாசன், ஆம்புலன்சுக்கு வழிவிட்டு மக்கள் தற்போது ஒரு நோயாளியின் உயிரை காப்பாற்றி உள்ளீர்கள். அதுபோல தமிழகத்துக்கு முதலுதவி செய்ய வேண்டுமானால், டார்ச் லைட் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். உங்களது கடமையை செய்யுங்கள். எங்களது கடமையை எளிதாக்குங்கள் என கூறினார்.

மேலும் செய்திகள்