வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து வீடுகளில் நகை, பணம் திருடிய இளம்பெண் கைது 50 பவுன் பறிமுதல்
வாடகைக்கு வீடு கேட்பது போல் நடித்து வீடுகளில் நகை, பணத்தை திருடிய இளம் பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 50 பவுன் நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் குமரானந்தபுரம் பகுதியில் வீட்டின் கதவை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைகளுக்கு செல்பவர்களின் வீடுகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள் நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி செல்லும் சம்பவம் தொடர்ந்து நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது பெண் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர் அந்த பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து கொண்டு, வீடுகளை வாடகைக்கு கேட்பது போல சுற்றித்திரிந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் அந்த பெண்ணை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவிட்டார். அதன்படி திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் சாம் ஆல்பர்ட் தலைமையில், தலைமை போலீஸ் தங்கவேல் உள்ளிட்ட போலீசார் கொண்ட குழு அந்த இளம்பெண்ணை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருட்டு வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் இளம்பெண் திருப்பூர் புதிய பஸ்நிலையத்தில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு நின்று கொண்டிருந்த அந்த பெண்ணை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த பெண் சிவகங்கை மாவட்டம் வெற்றியூர் உசிலங்குளத்தை சேர்ந்த மீனா என்கிற சரண்யா(வயது 27) என்பதும், இவர் தற்போது ஈரோடு மாவட்டத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
மேலும், இவர் திருப்பூருக்கு வந்து குமரானந்தபுரத்தில் வீடு எடுத்து தங்கி இருந்து, அந்த பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டும், பெண்களின் கவனத்தை திசை திருப்பியும் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 6 வீடுகளில் இருந்து சுமார் 40 பவுன் நகை திருடியது தெரியவந்தது. இதுமட்டுமின்றி அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள 2 வீடுகளில் இருந்து 6 பவுன் நகையும், திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 4 பவுன் நகையும் என மொத்தம் 50 பவுன் நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் இருந்த 50 பவுன் நகைகளை மீட்ட போலீசார் அவரை கைது செய்தனர்.