திருவெறும்பூர் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் கிராமம், கிராமமாக வாக்கு சேகரிப்பு

திருவெறும்பூர் ஒன்றியத்தில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் கிராமம், கிராமமாக வாக்கு சேகரித்தார்.

Update: 2019-04-07 23:00 GMT
திருச்சி,

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். திருநாவுக்கரசர் நேற்று திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கிராமம், கிராமமாக திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார். திருவளர்ச்சிப்பட்டி என்ற கிராமத்தில் தனது பிரசாரத்தை அவர் தொடங்கினார். பிரசாரத்தின்போது திருநாவுக்கரசர் பேசுகையில், ‘பிரதமர் நரேந்திர மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும். அதற்கு கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள். கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்த மோடி அதனை நிறைவேற்றாமல் 5 ஆண்டுகளை முடித்து விட்டார். மோடி அறிவித்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல குறு, சிறு தொழில்கள் நசுங்கி விட்டன. இந்த பகுதியில் படித்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். நான் நாடாளுமன்ற உறுப்பினரானால் இந்த தொகுதியில் தொழில் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார்.

காலையில் கும்பக்குடி, குண்டூர் பர்மா காலனி, போலீஸ் காலனி, அண்ணாநகர், எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாலையில் திருநெடுங்குளம், வாழவந்தான் கோட்டை, கிருஷ்ணசமுத்திரம், கூத்தப்பார், பத்தாளப்பேட்டை உள்ளிட்ட பல கிராமங்களிலும் திருநாவுக்கரசர் வாக்கு சேகரித்தார். அவருடன் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ. மற்றும் தி.மு.க, ம.தி.மு.க. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சென்று இருந்தனர். 

மேலும் செய்திகள்