வன்னியர் அறக்கட்டளை குறித்து பேசிய தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்காவிடில் வழக்கு தொடரப்படும் டாக்டர் ராமதாஸ் பேச்சு
வன்னியர் அறக்கட்டளை குறித்து பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர்மீது வழக்குத்தொடரப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.
வேலூர்,
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து காட்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேலூர் சேண்பாக்கத்தில் நேற்று மாலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மாம்பழம் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு பேசினார்.
அதைத்தொடர்ந்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் 24 கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்கு 450 சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது மெகா கூட்டணி. தமிழ்நாட்டிலேயே இதுபோன்ற கூட்டணி இதுவரை அமைந்தது கிடையாது. இந்த தொகுதியில் ஏ.கே.மூர்த்தி போட்டியிடுகிறார். ஏ.கே.மூர்த்தி என்றால் ‘ஆக்ஷன் கிங் மூர்த்தி’ என்று பட்டப்பெயர் உள்ளது. அவர் மக்கள் தொண்டன். அவரை வெற்றிபெற செய்ய நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள்.
‘ஆக்ஷன் கிங்’ என்ற சிறப்பு பட்டத்துக்கு பொருத்தமான ஏ.கே.மூர்த்தி உங்கள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வார். நிறைய திட்டங்களை கொண்டு வருவார். 13 மாதங்கள் ரெயில்வே மந்திரியாக இருந்துள்ளார். நீங்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய ஆர்.வேலு 5 ஆண்டுகள் மந்திரியாக இருந்தார். அப்போது எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார். திண்டிவனம்- நகரி இடையே 180 கிலோமீட்டர் தூரம் புதிய ரெயில்பாதையை கொண்டுவந்தார். அதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கினார். அரக்கோணம் உள்பட பல ரெயில்வே மேம்பாலங்களை கொண்டு வந்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் சுகாதார மந்திரியாக இருந்தபோதுதான் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அறுவைசிகிச்சை (சிசேரியன்) செய்யக்கூடிய வசதியை கொண்டு வந்தார். வாலாஜாவில் விபத்து அவசர சிகிச்சை மையத்தை கொண்டு வந்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.
ஆனால் நீங்கள் வாக்களித்து 2 முறை தேர்ந்தெடுத்த ஜெகத்ரட்சகன் இந்தப்பக்கம் வந்ததில்லை. அவருக்கு மக்கள்மீது அக்கறை இல்லை. இப்போது 3-வது முறையாக வந்துள்ளார். 2009-ல் இலங்கையில் 1½ லட்சம் தமிழர்களை சுட்டுக்கொன்றார்கள். 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் உணவின்றி தவித்தார்கள். மாவீரன் பிரபாகரனின் மனைவி குழந்தையை கொன்றார்கள்.
அந்த நாட்டில் ஜெகத்ரட்சகன் ரூ.26 ஆயிரம் கோடியை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த நிதியில் கொஞ்சமாவது ஒதுக்கி இந்த தொகுதியில் கல்வி நிறுவனமோ, தொழிற்சாலையோ தொடங்கினாரா?. தமிழர்களை அழித்த நாட்டில் முதலீடு செய்தால் அது எந்தமாதிரியான கட்சி என்பதை பார்க்கவேண்டும். சிங்களர்களை கண்டிக்க பா.ம.க.வும், அ.தி.மு.க.வும் துடிக்கிறது. ஆனால் அவர்களுக்கு பணம் கொடுக்க தி.மு.க. துடிக்கிறது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் கூட்டங்களில், வன்னியர் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்துக்களை எனது மனைவி சரஸ்வதி பெயருக்கு மாற்றிவிட்டதாக பிரசாரம் செய்து வருகிறார். அது எப்படி சாத்தியமாகும். எனது மனைவி பெயருக்கு மாற்றியதாக கூறுவதை நிரூபிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் தி.மு.க. தலைவர் பதவியில் இருந்தும், அரசியலில் இருந்தும் விலகவேண்டும்.
இதுசம்பந்தமாக அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 6 நாட்களாகியும் இதுவரை பதில் இல்லை. குறைந்தபட்சம் அவர் மன்னிப்பாவது கேட்கவேண்டும். உங்கள் வழக்கறிஞர்களை வைத்து ஆராய்ச்சி செய்யுங்கள். பொய்யான, அபாண்டமான தகவல்களை சொல்லக்கூடாது. ஏழை, எளிய, மிகவும் பிற்படுத்தப்பட்ட குழந்தைகள் படிப்பதற்காக நான் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கினேன். தொண்டர்களின் உழைப்பால் அது உருவாக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளையில் சட்டக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி உள்ளது. அதை தொடங்கிவைத்ததே கலைஞர்தான். இந்த அறக்கட்டளையில் எனக்கும், எனது மனைவிக்கும் சம்பந்தமில்லை. நான் அனுப்பிய வக்கீல் நோட்டீசுக்கு இதுவரை ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. எனவே அவர்மீது வழக்குத்தொடர இருக்கிறேன். அவர் வழக்கை சந்திக்கவேண்டும்.
நாங்கள் 10 வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம். அதில் ஒன்று அரசு ஊழியர்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது. தேர்தல் முடிந்ததும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். வேலூர் மாவட்டத்தில் 13 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டிலேயே வேறு எந்த மாவட்டத்திலும் இவ்வளவு தொகுதிகள் கிடையாது. எனவே இந்த மாவட்டத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று பல போராட்டங்களை நடத்தி இருக்கிறோம்.
எனவே இந்த மாவட்டத்தை திருப்பத்தூர், வேலூர், அரக்கோணம் ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு 3 மாவட்டங்களாக பிரிக்கவேண்டும் என்று 20 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துவருகிறோம். தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக பிரிக்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தை முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அதேபோன்று இதையும் செய்வார்.
அ.தி.மு.க., பா.ம.க. நல்ல திட்டங்களை அறிவித்துள்ளது. இது தேர்தலுக்காக அறிவிக்கப்படவில்லை. கண்டிப்பாக அவை நிறைவேற்றப்படும். 2 முறை திரும்பியே பார்க்காதவர் 3-வது முறையாக வந்துள்ளார். அவருக்கு பாடம்புகட்டவேண்டும். 2 வேட்பாளர்களையும் சீர்தூக்கிபார்த்து நல்ல வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.
காட்பாடி சட்டமன்ற தொகுதி மக்கள் நன்கு அரசியல் தெரிந்தவர்கள். நீங்கள் நல்லவேட்பாளரை தேர்ந்தெடுக்கவேண்டும். இரட்டை இலையுடன்கூடிய மாம்பழம் சின்னத்துக்கு வாக்களித்து மக்கள்தொண்டாற்ற ஏ.கே.மூர்த்தியை வெற்றிபெற செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரிகள் என்.டி.சண்முகம், ஆர்.வேலு, பா.ம.க. மாநில துணைப்பொதுச் செயலாளர் கே.எல்.இளவழகன், த.மா.கா. மாநகர மாவட்ட தலைவர் மூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர் திருவலம், பொன்னை, அக்ராவரம் ஆகிய ஊர்களில் பிரசாரம் செய்தார்.