புளியம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் சாவு

புளியம்பட்டி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

Update: 2019-04-07 22:15 GMT
ஓட்டப்பிடாரம்,


ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் மேலமடத்தை சேர்ந்தவர் சிவராஜ். இவரின் மனைவி நீலாவதி. இவர்களுடைய மகன் தர்மராஜ் (வயது 19) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களுடன் முயல் வேட்டைக்கு செல்வதாக நீலாவதியிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை தர்மராஜின் நண்பர் ரஞ்சித் என்பவர், நீலாவதியை செல்போனில் தொடர்பு கொண்டு, தர்மராஜூக்கு மின்சாரம் தாக்கியதாகவும், அவனை மீட்டு ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அங்கு இருந்து மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தர்மராஜ் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தர்மராஜ் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நண்பர்கள் அனைவரும் புளியம்பட்டியை அடுத்துள்ள கொடியங்குளம் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றதும், அப்போது அங்கு தனியார் காற்றாலைக்கு செல்லும் மின்கம்பத்தில் தர்மராஜ் ஏறியதும், அங்கு அவரை மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்