எண்ணூர் அருகே கடலில் குளித்த 2 மாணவர்கள் மாயம்

எண்ணூர் அருகே கடலில் குளித்த 2 மாணவர்கள், ராட்சத அலையில் சிக்கி மாயமானார்கள். அவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Update: 2019-04-07 22:45 GMT
திருவொற்றியூர்,

எண்ணூர் பாரத் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் சேகர். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் தமிழரசன்(வயது 18). இவர், மணலி சேலைவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்தவர் கவின்(17). இவர், பாரதியார் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் வம்சி(16), விபிக்(17), ரவிக்குமார்(18). இவர்கள் 5 பேரும் நண்பர்கள்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் நண்பர்கள் 5 பேரும் எண்ணூர் அருகே பாரதியார் நகர் கடலில் ஆனந்தமாக குளித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று வந்த ராட்சத அலை கல்லூரி மாணவர் தமிழரசன், பள்ளி மாணவர் கவின் ஆகியோரை கடலுக்குள் இழுத்துச்சென்றது.

இதனை பார்த்த சக நண்பர்கள் கூச்சலிட்டனர். அப்போது அங்கு வலைகளை சரி பார்த்துக்கொண்டிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி 2 பேரையும் தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மீனவர்கள் பைபர் படகில் கடலுக்குள் சென்று தேடினர். ஆனால் எங்கு தேடியும் இருவரையும் காணவில்லை. இதுபற்றி போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராட்சத அலையில் சிக்கி மாயமான 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடற்கரைக்கு விரைந்து வந்து கதறி அழுதனர். சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

எண்ணூர் பாரதியார் நகர் கடற்கரை பகுதியில் குளிக்க தடை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக எண்ணூர் போலீசார் சார்பில் வைக்கப்பட்டு இருந்த எச்சரிக்கை பலகையை யாரோ திருடிச்சென்று விட்டனர். கடந்த சில நாட்களாக சென்னையில் வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால் தடையை மீறி பொதுமக்கள் குடும்பத்துடன் எண்ணூர் கடற்கரை சாலையை ஒட்டிய பல பகுதிகளில் கடலில் குளித்து வருகின்றனர்.

இதனால் அடிக்கடி கடலில் மூழ்கி பலர் உயிரிழந்து உள்ளனர். தற்போது கடலில் ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயமானது தெரிந்தும், அதைப்பற்றி கவலைப்படாமல் அதே பகுதியில் குளித்து வருகின்றனர். எனவே போலீசார் நிரந்தரமாக இந்த பகுதியில் கடலில் குளிக்க தடை விதிப்பதுடன், தீவிர ரோந்து பணியிலும் ஈடுபடவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்