காங்கிரஸ் மீது மோடி கடும் தாக்கு நடுத்தர மக்கள் மீது வரிச்சுமையை ஏற்ற முயற்சிப்பதாக குற்றச்சாட்டு
நாந்தெட் நாடாளுமன்ற தொகுதியில் அசோக் சவானுக்கு எதிராக பிரசாரம் செய்த பிரதமர் மோடி காங்கிரசை கடுமையாக தாக்கி பேசினார். நடுத்தர மக்கள் மீது வரிச்சுமையை ஏற்ற முயற்சிப்பதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி அவர் குற்றம் சாட்டினார்.
நாந்தெட்,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மராட்டியத்தில் தேசிய தலைவர்களும், மாநில தலைவர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோடி பிரசாரம்
மராட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் அசோக் சவான் போட்டியிடும் நாந்தெட் தொகுதியில் அவருக்கு எதிராக நேற்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் நாத்தெட், லாத்தூர், ஹிங்கோலி பர்பானி ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.
அப்போது காங்கிரஸ் கட்சி மீதும், அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை பற்றியும் அவர் கடுமையாக தாக்கி பேசினார்.
பிரசாரத்தில் மோடி பேசியதாவது:-
நடுத்தர மக்கள் மீது நிதிச்சுமை
காங்கிரஸ் கட்சி ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமானம் உறுதிசெய்யப்படும் என்று கூறியுள்ளது. இந்த திட்டத்திற்கான நிதிச்சுமையை நடுத்தர வர்க்கத்தினர் முதுகில் ஏற்ற அக்கட்சி திட்டமிடுகிறது. அந்த தரப்பு மக்களிடம் கூடுதல் வரி விதிக்க முயற்சிக்கிறது.
இது நாட்டின் முதுகெலும்பான நடுத்தர வர்க்கத்தினரை ஒன்றும் இல்லாமல் செய்துவிடும்.
ஆனால் நாங்கள் நடுத்தர மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். குறிப்பாக வருமான வரி விலக்கு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. பொதுப்பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி உள்ளோம்.
டைட்டானிக் கப்பல்
காங்கிரஸ் கட்சி எப்போது பிரச்சினை ஏற்படும் போதும் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசும். பின்னர் கஜினி படத்தில் வரும் நாயகன் போல அனைத்தையும் மறந்துவிடும்.
டைட்டானிக் கப்பல் போல காங்கிரஸ் மூழ்கி கொண்டு இருக்கிறது. 2014-ம் ஆண்டை காட்டிலும் அவர்களின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் அந்த கட்சி 44 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் அதை விட மோசமான தோல்வியை அடையும்.
தேசத்துரோக சட்டப்பிரிவை நீக்குவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இது நாம் நாட்டை அழிக்க நினைப்பவர்களின் கையில் உரிமம் கொடுப்பதற்கு சமமாகும்.
இந்துக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே கட்சியின் தலைவர் நுண்ணோக்கி மூலம் பார்த்து சிறுபான்மையினர் பொரும்பான்மையாக உள்ள தொகுதியை தேர்வு செய்துள்ளார். இது தனக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என கருதி அந்த இரண்டாவது நாடாளுமன்ற தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். மேலும் தான் அங்குள்ள இடது சாரிகளுக்கு எதிராக பேசமாட்டேன் என தெரிவித்துள்ளார்.
பயந்து ஓட்டம்
ஹிங்கோலியில் தற்போது எம்.பி.யாக உள்ள காங்கிரசை சேர்ந்த ராஜீவ் சதாவ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோர் தோல்விக்கு பயந்து தேர்தல் போட்டியில் இருந்து விலகி ஓடிவிட்டனர்.
மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியில் அதன் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையை விட அதிக கோஷ்டிகள் உள்ளன.
இ்வ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், கட்சியின் மாநில தலைவர் ராவ்சாகேப் தன்வே மற்றும் பா.ஜனதா, சிவசேனா கட்சியை சேர்ந்த மந்திரிகள் கலந்துகொண்டனர்.