ரெயில் புறப்பட்ட போது கைப்பையை பறித்த திருடனை பிடிக்க முயன்ற பெண் கீழே விழுந்து படுகாயம்

மும்பை சி.எஸ்.எம்.டி ரெயில் நிலையத்தில் பெண் பயணியிடம் கைப்பையை பறித்தவரை போலீசார் கைது செய்தனர். திருடனை பிடிக்க முயன்றபோது ரெயிலில் இருந்து தவறி விழுந்து அப்பெண் படுகாயமடைந்தார்.

Update: 2019-04-06 22:29 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்தவர் ஆர்த்தி சிங் (வயது26). இவர் சி.எஸ்.எம்.டி.யில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆர்த்தி சிங் பணி முடிந்து காட்கோபர் செல்ல மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அங்கு பிளாட்பாரம் நம்பர் 5-ல் டிட்வாலா செல்லும் விரைவு ரெயிலில் ஏறினார். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் வாசற்படியில் நின்று கொண்டு இருந்தார். இதில் ரெயில் புறப்பட்ட போது பிளாட்பாரமில் நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் திடீரென ஆர்த்தி சிங்கிடம் இருந்த கைப்பையை பறித்து விட்டு ஓடினார்.

தவறி விழுந்தார்

இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்த்தி சிங் கைப்பையை பறித்த ஆசாமியை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் இருந்து பிளாட்பாரமில் குதித்தார். இதில் நிலைதடுமாறிய அவர் பிளாட்பாரத்தில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இந்தநிலையில், பிளாட்பாரத்தில் நின்றிருந்த பயணிகள் கைப்பையை பறித்துவிட்டு தப்பியோட முயன்ற ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் படுகாயமடைந்த ஆர்த்தி சிங்கை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிடிபட்ட ஆசாமியை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவரது பெயர் முகமது ரிஸ்வான் கான் என்பது தெரியவந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்