தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் ஓட்டுப்போட வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைப்பு
தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் தபால் ஓட்டுப்போட வாக்குச்சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
கோவை,
தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடக்கிறது. கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் 14 ஆயிரத்து 850 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். போலீசார், தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதனால் தேர்தல் அன்று அவர்களால் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியாது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுகள் வினியோகிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி தேர்தலுக்கு முன்பாகவே அவர்கள் தபால் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) 10 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. அங்கு பயிற்சி முடிந்ததும் அவர்கள் தபால் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
அதன்படி நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பயிற்சி வகுப்புகள் நடக்கும் மையங்களுக்கு தபால் ஓட்டுகளுக்கான வாக்குச்சீட்டுகள், அதை உள்ளே வைத்து அனுப்புவதற்கான கவர்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் என்று மொத்தம் 20 ஆயிரம் பேர் தபால் ஓட்டுப்போட உள்ளனர். நாளை நடக்கும் பயிற்சி வகுப்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மட்டும் பங்கேற்கிறார்கள். எனவே அந்தந்த பயிற்சி மையங்களுக்கு 14 ஆயிரத்து 850 தபால் ஓட்டு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
பயிற்சி முடிந்ததும் அவர்களுக்கு தபால் ஓட்டுப்போட வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். அதில் முத்திரை பதித்து அவர்கள் அங்கேயே வைக்கப்பட்டு உள்ள ஓட்டுப்பெட்டியில் அதை போடலாம். இல்லை என்றால் கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் பெட்டி யில் போடலாம். நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் அடுத்த மாதம் (மே) 22-ந் தேதி வரை அவர்கள் தபால் ஓட்டுகளை கொடுக்கலாம்.
தபால் ஓட்டு போடுபவர்கள் அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்குள் வசிப்பவர்கள் என்றால் படிவம் 12-ம், மற்ற நாடாளுமன்ற தொகுதிக்குள் வசிப்பவர்கள் என்றால் படிவம் 12-ஏ-ஐயும் பூர்த்தி செய்து கெஜட்டட் (பதிவு பெற்ற) அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கி வாக்குச்சீட்டில் முத்திரை பதித்து தபால் ஓட்டுகளை போட வேண்டும். போலீசாருக்கு ஓரிரு நாட்களில் தபால் ஓட்டுகள் போட வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.