மேட்டுப்பாளையம் தம்பதிக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு - கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
மேட்டுப்பாளையம் தம்பதி பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை,
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமானவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.
அதில் சிகிச்சை பலனளிக்காமல் 100-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். சுகாதாரத்துறையின் தீவிர தடுப்பு நடவடிக்கையால் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்தது. தற்போது வடமாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை யிலும் பன்றிக்காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த கணவன்-மனைவிக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவர்கள் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதியடைந்து வந்தனர். இதற்காக அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இருப்பினும் காய்ச்சல் குறையவில்லை. பின்னர் அவர்களின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்களை அங்குள்ள டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பன்றிக்காய்ச்சல் சிகிச்சை வார்டில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது பற்றி தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மேட்டுப்பாளையம் பகுதியில் சென்று வேறு யாருக்கும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-
பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மினாலோ அல்லது இருமினாலோ அவர்களிடம் இருந்து இந்த நோய் விரைவாக பரவுகிறது.
மேலும் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கும்போதும் பரவுகிறது. அத்துடன் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் ஒரு இடத்தில் தொட்டால் அங்கு வைரஸ் கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். அந்த இடத்தில் இன்னொருவர் தொடும்போது வைரஸ் கிருமிகள் அவரிடம் தொற்றிக்கொள்ளும்.
இதை தடுக்க அடிக்கடி கைகளை கழுவவேண்டும். முக்கியமாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இளஞ்சூடு தண்ணீரில் கழுவினால் நல்லது. இருமல் மற்றும் தும்மல் வரும்போது கைக்குட்டை பயன்படுத்தினால் கிருமி வெளியே செல்லாது. குழந்தைகள் வெளியே விளையாட செல்லும் போது உடல் முழுவதும் மூடி இருக்கும்படி துணிகளை அணிய செய்ய வேண்டும். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்து உள்ளனர். அத்துடன் இதனை உடனே தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.