ஏழைகள் வளர்ச்சி அடைவதை பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை பிரசாரத்தில் மாயாவதி பேச்சு
ஏழைகள் வளர்ச்சி அடைவதை பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் விரும்பவில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பேசினார்.
நாக்பூர்,
பகுஜன் சாமஜ் கட்சியின் தலைவர் மாயாவதி நேற்று ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் அமைந்துள்ள நாக்பூரில், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மற்றும் மற்ற மதத்தை சேர்ந்த சிறுபான்மையினர் சிறிதேனும் பாதுகாப்பாக இருக்க காரணம் சட்டமேதை அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் கொடுத்த உரிமைகள் தான். அவரின் பாதையில் நாம் போராட வேண்டும்.
நாக்பூரில் இருந்து ஆர்.எஸ்.எஸ். கொடுக்கும் அறிவுறுத்தலின் பேரிலேயே பா.ஜனதா அரசு சட்டங்களை உருவாக்குகிறது. அவர்கள் ஏழைகள் வளர்ச்சி அடைவதை விரும்பவில்லை.
அவர்கள் பழைய முறைகளை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மேலும் அவர்களை தொடர்ந்து ஏழைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும் வைத்திருக்க முயற்சிக்கின்றனர்.
வளர்ச்சி பாதிப்பு
பா.ஜனதா ஆட்சியின் கீழ் இருக்கும் மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் வளர்ச்சி கீழ்நோக்கி சென்றுவிட்டது.
மத்திய அரசின் தவறான ஆட்சியால் வேலையின்மை, அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் ஏழைகள் மற்றும் சிறுவணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கும் திட்டம் வறுமையில் வாடும் மக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்காது. எங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் மூலம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். வேலைவாய்ப்பு ஒன்றே மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.
இவ்வாறு மாயாவதி பேசினார்.