நாட்டின் எதிர்காலத்தை இந்த தேர்தல் நிர்ணயம் செய்யும் - ஜி.கே.வாசன் பேச்சு

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் தேர்தலாக அமையும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

Update: 2019-04-05 23:00 GMT

சிவகங்கை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சிவகங்கையில் திறந்த வேனில் சென்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். மத்தியில் பா.ஜனதா ஆட்சி தொடர வேண்டும். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் தேர்தலாகும்.

அ.தி.மு.க. கூட்டணி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவை பெற்ற கூட்டணி. ஏழை, எளிய மக்கள், பாட்டாளிகள், விவசாயிகளின் நலனை காக்கும் கூட்டணி. எதிர் அணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஆதரமற்ற குற்றசாட்டை கூறுகிறார். அடுத்தவரை பற்றி குறை கூற தகுதியற்றவர் இந்த வேட்பாளர். பா.ஜனதா ஆட்சி கடந்த 5 வருடமாக சிறப்பாக நடைபெற்றுள்ளது. மேலும் 5 ஆண்டு இந்த ஆட்சி வரக்கூடாது என்று நினைக்கின்றனர். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை மக்கள் செல்லாத நோட்டாக கருதுகின்றனர்.

சிறுபான்மையினர் நலன் பற்றி பேசும் காங்கிரஸ் போட்டியிடும் 9 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட கிறிஸ்தவ, முஸ்லிம் வேட்பாளர்கள் கிடையாது. அத்துடன் 9 தொகுதிகளில் 5 தொகுதிகளில் வாரிசுகளை நிறுத்தியுள்ளனர் இதுதான் ஜனநாயகமா? எங்கள் வேட்பாளரிடம் குணம் உள்ளது.

எங்கள் வேட்பாளரால் ஏழை எளிய மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர முடியும். எச்.ராஜா இங்கேயே தங்கியிருப்பவர் தொகுதி மக்களுக்கு பல திட்டங்களை கொண்டு வர கூடியவர். எனவே அவருக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன், த.மா.கா. மாநில பொதுசெயலாளர் உடையப்பன், மாநில செயலாளர் ராஜலிங்கம், நகர் தலைவர் செல்வரெங்கன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஸ்வநான் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்