தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் மைசூருவில் யுகாதி பண்டிகை களை இழந்தது
தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் மைசூருவில் யுகாதி பண்டிகை களை இழந்துள்ளது.
மைசூரு,
யுகாதி பண்டிகையை கன்னட, ஆந்திரா, மராட்டிய மக்கள் தங்களுடைய புது வருடமாக கொண்டாடு கிறார்கள். ஆங்கில புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டை போல் அவர்கள் யுகாதி பண்டிகையை புதுவருடமாக ஒவ்வொரு வருடமும் வெகு கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இந்து பஞ்சாங்கப்படி யுகாதி பண்டிகை நாளில் இருந்துதான் புது வருடம் ஆரம்பம் ஆகிறது. புது பஞ்சாங்கத்தின்படி இந்த வருடம் ஸ்ரீவிளம்பி சம்வத்சரம் முடிகிறது. மேலும் விகாரி சம்வத்சரம் எனும் புது வருடம் தொடங்குகிறது.
இந்தப் பண்டிகையை மக்கள் உற்சாகத்துடனும், கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் பக்தியுடனும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். சுற்றுலா நகரமான மைசூருவில் பலதரப்பட்ட மக்கள் வசித்து வருவதால், அவர்களால் யுகாதி பண்டிகை ஒவ்வொரு வருடமும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்னதானம் வழங்குவார்கள்
இந்தப் பண்டிகையின்போது மக்கள் புத்தாடைகளை அணிந்து கோவில்களில் விசேஷ பூஜைகள் செய்வார்கள். பின்னர் வீடுகளிலும் தங்களுடைய இஷ்ட தெய்வங்களுக்கு விசேஷ பூஜைகள் செய்து, இனிப்பு மற்றும் உணவுகள் தயாரித்து அன்னதானம் வழங்குவார்கள்.
மேலும் நீர்மோர், வெல்லத்தால் தயாரித்த பானம் போன்றவற்றை மக்களுக்கு கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி வேப்பிலையுடன் வெல்லம் சேர்த்து அரைத்து சாப்பிடுவதற்கு கொடுப்பார்கள். இதனுடைய அர்த்தம் வாழ்க்கையில் கஷ்டம், சுகம் இரண்டும் வருகிறது, இரண்டையுமே சமமாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது தான்.
விளையாட்டு போட்டிகள்
சில கிராமங்களில் யுகாதி பண்டிகையையொட்டி கிராம தேவதைகளின் பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும். அப்போது கிராம மக்கள் கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவார்கள். இதுமட்டுமல்லாமல் யுகாதி பண்டிகையையொட்டி கிராம விளையாட்டு போட்டிகள், நீர் விளையாட்டுகள், ஆண்கள் மீது பெண்கள் தண்ணீர் தெளிப்பது போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடக்கும்.
அதில் மக்கள் தங்களுடைய குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என அனைவருடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக பங்கேற்று விளையாடுவார்கள். முன்னதாக வீடுகளின் வாசல்களில் மா இல்லை, வேப்பிலை இலைகளைக் கொண்டு தோரணம் கட்டி அலங்கரிப்பார்கள்.
யுகாதி பண்டிகை களை இழந்தது
ஆனால் இந்த முறை மைசூருவில் யுகாதி பண்டிகை களை இழந்து உள்ளது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருப்பதால் மக்கள் யாரும் பணத்தை அதிக அளவில் வெளியே எடுத்து வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதனால் மைசூரு டவுனில் இருக்கும் பெரிய மார்க்கெட், சின்ன மார்க்கெட், பூ மார்க்கெட், பழ மார்க்கெட், ஜவுளிக்கடைகள் உள்பட அனைத்து இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. பெரிய அளவில் கூட்ட நெரிசல் இல்லை. இருப்பினும் சில இடங்களில் மக்கள் அதிக அளவில் திரண்டு யுகாதி பண்டிகைக்கான பூஜை பொருட்களை வாங்கிச் சென்றனர்.
பண்டிகையை விட தேர்தல் சூடுபிடித்துள்ளதால் யுகாதி பண்டிகை களையிழந்து காணப்படுகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.