மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் உறுதி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று சேலத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் உறுதியளித்தார்.

Update: 2019-04-05 21:30 GMT
சேலம், 

சேலம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் நேற்று கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட அன்னதானப்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவர், நெத்திமேடு, மணியனூர், லைன்மேடு, குகை, பிரபாத், பஞ்சதாங்கி ஏரி, தாதுபாய் குட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீதி, வீதியாக சென்று தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறிய விவரங்களை பொதுமக்களிடம் எடுத்துக்கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது தி.மு.க. வேட்பாளர் எஸ்.ஆர். பார்த்திபன் பேசும்போது, மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு தொழில்கள் நலிவடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படும். நெசவாளர்கள் மற்றும் ஜவுளி மொத்த வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் நலன் பாதுகாக்கப் படும்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும். இதுதவிர, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியபடி, விவசாயிகளின் நகை அடமானக்கடன் ரத்து செய்யப்படும். சமையல் கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்துவோம். சேலம் இரும்பாலையில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை கொண்டு வர நடவடிக்கை எடுத்து உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், என்றார்.

இந்த பிரசாரத்தின்போது, சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பொருளாளர் சுபாஷ், மாநகர செயலாளர் ஜெயக்குமார், பகுதி செயலாளர் சரவணன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்