சேலம், கெங்கவல்லியில் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல்

சேலம், கெங்கவல்லியில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-04-05 22:15 GMT
சேலம்,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ரோகிணி தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட நெத்திமேடு பகுதியில் வாகன சோதனை நடத்தினார்.

சேலம் மேற்கு சட்டசபை தொகுதிக்குபட்ட ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே தேர்தல் பறக்கும்படை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதில் ரூ.11 லட்சத்து 16 ஆயிரத்து 320 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணையில் நடத்தினர்.

அப்போது அவர்கள், பெரிய நிறுவனங்களில் வசூலாகும் பணத்தை வங்கிகளுக்கு எடுத்து செல்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். மேலும் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சாரதா ருக்குமணியிடம் ஒப்படைத்தனர்.

கெங்கவல்லி பகுதியில் உள்ள இலுப்பு தோப்பு பகுதியில் பறக்கும்படை அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வீரகனூர் பகுதியை சேர்ந்த ஆடிட்டர் பிரபாகரன் என்பவரின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்து 800 இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணம் இல்லாததால் இந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் மற்றும் கெங்கவல்லியில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.13 லட்சத்து 6 ஆயிரத்து 120 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்