காட்டுமன்னார்கோவில் அருகே, பள்ளி கழிப்பறையில் தற்கொலை செய்த மாணவியின் உடலுடன் உறவினர்கள் மறியல்
காட்டுமன்னார்கோவில் அருகே பள்ளி கழிப்பறையில் தற்கொலை செய்த மாணவியின் உடலை வைத்து உறவினர்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில்,
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி மெய்யத்தூரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 39). உப்பு வியாபாரி. இவரது 2-வது மகள் துர்கா தேவி (13). இவள் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி கழிப்பறையில் மாணவி துர்காதேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து குமராட்சி போலீசார் அந்த மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் உடல் ஆம்புலன்சில் மூலம் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது.
இதற்கிடையே மெய்யாத்தூர் பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மாணவியின் உறவினர்கள் ஒன்று திரண்டனர். அப்போது மாணவியின் உடல் எடுத்து வந்த ஆம்புலன்ஸ் வந்தது. உடனே அந்த ஆம்புலன்சை சாலையின் குறுக்கே நிறுத்தி, உறவினர்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவியின் சாவில் சந்தேகம் உள்ளது. இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் தலைமையிலான போலீசார் மற்றும் தாசில்தார் தமிழ்செல்வன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலை ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.
இதைதொடர்ந்து போலீசார் வேறு வழியின்றி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பின்னர் ஆம்புலன்ஸ் மாணவியின் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கு அவரது உடல் இறுதிஅஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏறுபட்டது.