விளாத்திகுளம் பகுதியில் வாகன சோதனையில் ரூ.2.29 லட்சம் பறிமுதல்
விளாத்திகுளத்தில் பறக்கும்படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.2.29 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம்,
விளாத்திகுளம் மகராஜபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சுந்தரி தலைமையிலான குழுவினர் நேற்று காலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 850-யை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதிகாரிகளின் விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஏரல் அருகே பண்டாரவிளையைச் சேர்ந்த பால் தனசேகரன் என்பதும், இவர் வேம்பாரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் சபை ஊழியராக பணியாற்றுவதும், இவர் அங்குள்ள சபையின் காணிக்கை பணத்தை நாகலாபுரம் சேகர குருவிடம் ஒப்படைக்க செல்வதாகவும் தெரிவித்தார்.
இதேபோன்று விளாத்திகுளம் அருகே ஓ.லட்சுமிநாராயணபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் விக்னேஷ் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற ரூ.90 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகளின் விசாரணையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர் ஓ.லட்சுமிநாராயணபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பதும், இவர் தனது சொந்த தேவைக்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜ்குமாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம், விளாத்திகுளம் கிளை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.