பணம் எடுத்து செல்வதில் வியாபாரிகளுக்கு தேர்தல் ஆணையம் சலுகை வழங்க வேண்டும் ஈரோட்டில் சரத்குமார் பேட்டி
பணம் எடுத்து செல்வதில் வியாபாரிகளுக்கு தேர்தல் ஆணையம் சலுகை வழங்க வேண்டும் என்று ஈரோட்டில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சரத்குமார் கூறினார்.
ஈரோடு,
சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து குமாரபாளையத்திலும், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நாமக்கல்லிலும் இன்று (நேற்று) பிரசாரம் செய்தேன். கடந்த 27-ந்தேதி முதல் அ.தி.மு.க.விற்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறேன்.
மக்களின் எழுச்சி, ஆரவாரத்தை பார்க்கும்போது, அ.தி.மு.க. உருவாக்கி உள்ள இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். நாற்பதும் நமதே என்ற இலக்கையும் அடையும். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
தேர்தல் நேரத்தில் பணம் எடுத்துச்செல்வதில் நேர்மையான வியாபாரிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தேர்தல் முடிந்தவுடன் சரி செய்யப்படும்.
நான் அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து பயணித்து வருகிறேன். கூட்டணி வாக்குறுதியை நான் மீறவில்லை. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வேண்டும் என கட்சியினர் விரும்பியதால் நான் அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறேன். மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி உள்பட பலர் இருந்தனர்.