தேசிய நிர்வாகக்குழு கூட்டம்: நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு யாருக்கு? வணிகர்கள் சம்மேளன தேசிய பொதுச்செயலாளர் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் வணிகர்கள் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது அரசியல் கட்சியினரின் கைகளில் தான் உள்ளது என்று சமேளனத்தின் தேசிய பொதுசெயலாளர் கூறினார்.

Update: 2019-04-03 22:30 GMT

புதுச்சேரி,

அகில இந்திய வணிகர் சமமேளத்தின் தேசிய நிர்வாகக்குழு கூட்டம் புதுச்சேரி சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு தலைவரும், அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவருமான சிவசங்கர் தொடங்கி வைத்து பேசினார்.

கூட்டத்திற்கு அகில இந்திய வணிகர்கள் சம்மேளன நாக்பூர் தலைவர் பார்த்தியா தலைமை தாங்கினார். அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் அகமதபாத் சேர்மன் மகேந்திரஷா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கலந்துகொண்டு பேசினார். இதில் அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் பிரவின் கன்டேல்வால் நோக்கவுரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து அகில இந்திய வணிகர்கள் சம்மேளனத்தின் தேசிய பொதுச்செயலாளர் பிரவின் கன்டேல்வால், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:–

தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் 27 மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்தியாவின் மிக முக்கிய தொழிலாக வணிகம் திகழ்கிறது. இதில் 7 கோடி வணிகர்களும், 30 கோடி தொழிலாளர்களும் உள்ளனர்.

வணிகர்களின் நலனுக்காக பல்வேறு தீர்மானங்களை நாளை (இன்று) நிறைவேற்றி அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கையாக அளிக்க உள்ளோம். எங்களின் அதிகபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்கு வெறும் 2 திட்டங்கள் மட்டுமே உள்ளது. இது ஏமாற்றத்தை தருகிறது.

தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்துவிடுவார்கள். இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ரூ.5 லட்சம் வரை பணம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வணிக சங்கங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் தற்போதைய வியாபார சூழ்நிலை, சந்தையில் சைனா பொருட்களின் ஆக்கிரமிப்பு, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வரும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டிய தேசிய வணிக கொள்கை, சரக்கு மற்றும் சேவை வரியில் உள்ள முரண்பாடுகள், வணிகர்களுக்கான பிரச்சினைகள், ஆன்லைன் வர்த்தகம் அன்னிய முதலீடு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முடிவில் புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பாலு நன்றி கூறினார்.

இந்த கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் வணிகர்களின் பிரச்சினைகள் அடங்கிய கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்