“வாக்குச்சாவடி மையங்களை நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பர்” கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
“வாக்குச்சாவடி மையங்களை நுண்பார்வையாளர்கள் கண்காணிப்பர்“ என மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக மண்டல அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர்கள் சீமா சர்மாஜெயின், துக்கிசியாம் பெய்க், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பொது பார்வையாளர் மாதவி லதா ஆகியயோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தலைமை வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்களுக்கும் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
வருகிற 7-ந் தேதி 2-ம் கட்ட பயிற்சி நடக்கிறது. பயிற்சியில் கலந்துகொள்ளும் அலுவலர்கள் வாக்காளர் ஒப்புகை சீட்டு எந்திரம் கையாளுதல், மாதிரி வாக்கு பதிவு செய்வது எவ்வாறு மற்றும் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பதிவு எந்திரத்துக்கு எவ்வாறு சீல் வைப்பது உள்ளிட்ட அனைத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருவதால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் பேசும் போது, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளான்று பணியாற்றும் வாக்குசாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து கையேடுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை பார்த்து தெரிந்து கொண்டு வாக்குபதிவு நாளில் சிறப்பாக பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடி மையத்தில் தாங்கள் மேற்கொள்ளும் பணிகளை நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள். எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
வாக்குச்சாவடி மையங்களில் ஏற்படுத்தப்பட்டு உள்ள குடிநீர், கழிப்பறை, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சாய்வு தளம் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதையும், வாக்குசாவடி மையங்களுக்கு செல்லும் சாலை சீராக உள்ளதா என்பதையும் மாற்று பாதை உள்ளதா என்பதையும் ஆய்வு செய்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். கடந்த தேர்தலில் குறைவாக ஓட்டுப்பதிவாகி உள்ள வாக்குச்சாவடி பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மண்டல அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் வரைவு படம் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் வி.பி.ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, தேர்தல் பிரிவு தாசில்தார் நம்பிராயர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.