பாம்பனில் ஆமை கறி விற்க முயன்ற 4 பேர் கைது 6 பேர் தப்பி ஓட்டம்

பாம்பனில் வேட்டையாடி ஆமை கறி விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய 6 பேர் வனத்துறையில் தேடிவருகின்றனர்.

Update: 2019-04-03 23:00 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின் ஆமை, கடல் குதிரை, கடல் விசிறி உள்ளிட்ட 3,600 வகையான அரிய கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. கடல்ஆமை, டால்பின், கடல்குதிரை, சுறாமீன் உள்ளிட்ட அரியவகை உயிரினங்களை மீனவர்கள் பிடிக்க மத்திய அரசால் தடை விதிக்கப்பட்டுஉள்ளது.

இந்நிலையில் பாம்பன் பகுதியில் சிலர் அரிய வகை உயிரினமான கடல் ஆமைகளை வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதை தொடர்ந்து மண்டபம் வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறையினரும் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்களும் நேற்று பாம்பன் சின்னப்பாலம் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது வனத்துறையினரை கண்டதும் சிலர் தப்பி ஓடினர். இதில் 4 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் பிளாஸ்டிக் கேனில் மறைத்து வைத்திருந்த ஆமை கறியை பறிமுதல் செய்தனர்.4 பிளாஸ்டிக் கேன்களில் இருந்த சுமார் 70 கிலோ ஆமை கறி பறிமுதல் செய்யப்பட்டது.

ஆமையை வேட்டையாடி விற்பதற்காக கொண்டு சென்ற பாம்பன் அக்காள்மடத்தை சேர்ந்த அந்தோணிசந்தியாகு (வயது28), ரூபன்(25), மைக்கேல்(29), விக்னேஷ்(20) ஆகிய 4 பேரை கைது செய்து மண்டபம் வனத்துறை அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தப்பி ஓடிய பாம்பனை சேர்ந்த எசா,பூசதுரை மற்றும் தங்கச்சிமடத்தை சேர்ந்த நாளி, ரமேஷ், தினா, டேவிட் ஆகிய 6 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இது பற்றி வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:– பாம்பன் சின்னப்பாலம் பகுதிகளில் பிடிபட்டுள்ள 4 பேரில் விசாரணை நடத்தியதில் ஒருவர் மட்டுமே ஆட்டோ டிரைவர்.மற்றவர்கள் மீனவர்கள் போல் மீன்பிடிக்க செல்லவதாக கூறி மீன் பிடிப்பதுபோல் கடலில் ஆமைகளை உயிருடன் பிடித்து வேட்டையாடி உள்ளனர்.வேட்டையாடிய ஆமைகளை துண்டு துண்டாகாக வெட்டி அதை ஆமை கறி என பல பேரிடமும் 1 கிலோ ரூ.200 முதல் 300 வரை விற்பனை செய்துள்ளனர். தப்பி ஓடிய 6 பேரை தீவிரமாக தேடி வருகிறோம்.

ஆமைகளை பிடித்து வேட்டையாடும் நபர்களை கண்டால் மீனவர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.ஆமைகளை பாதுகாக்க மீனவர்களும் வனத்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்