வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை

வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-04-03 23:00 GMT
புதுக்கோட்டை,

இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 18-ந் தேதி நடைபெறும் என அறிவித்தது. இதை யடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் 3 நிலையான கண் காணிப்பு குழுவினர் மற்றும் 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக்குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது அந்த வழியாக செல்லும் அனைத்து கார்கள் உள்ளிட்ட வாகனங்களை முழுமையான சோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர். ஆவுடையார்கோவில் வட்டார கல்வி அதிகாரி லதாபேபி தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சமுத்திரன், விஸ்வநாதன், அன்புரோஸ் ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் புதுக்கோட்டை அருகே உள்ள கருவப்பிலான்கேட் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது அந்த வழியாக திருச்சியில் இருந்து ராமேசுவரம் சென்று கொண்டிருந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது வேனில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 500 வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் வேனில் கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட் கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து பணம் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்து. தொடர்ந்து பணத்தை புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணியிடம் ஒப்படைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ராமேசுவரத்தை சேர்ந்த வேன் டிரைவர் குமரேசன் மற்றும் அவருடன் வந்த ஆனந்தராமன் ஆகியோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஆலங்குடி அருகே உள்ள ஆவணம் கைகட்டியில் பறக்கும் படையினர் மற்றும் ஆலங்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பட்டுக்கோட்டையிலிருந்து வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் ரூ.93 ஆயிரத்து 545 இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் சிவகங்கை நாடாளுமன்ற உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ராதா ஜெயலட்சுமியிடம் ஒப்படைத்தனர். அப்போது ஆலங்குடி கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கருப்பையா, தேர்தல் துணை வட்டாட்சியர் ஜபருல்லா ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்