திருவாரூர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 10 டன் உளுந்து, பயறு கொள்முதல்

திருவாரூர் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 10 டன் உளுந்து, பயறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-04-03 23:00 GMT
திருவாரூர்,

நடப்பு ஆண்டில் பயறு வகைகளுக்கு மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில்் உளுந்து மற்றும் பச்சை பயறு கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதில் பெரும்பான்மையாக நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக உளுந்து, பயறு மற்றும் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நெல் கொள்முதல் நடைபெறுவதுபோல் தற்போது டெல்டா மாவட்டங்களில் விலை ஆதரவு திட்டத்தின்கீழ் உளுந்து மற்றும் பச்சைப்பயறு தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம் நிறுவனத்தின் மூலமாக அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி மற்றும் வடுவூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் தொடங்கியுள்ளது. இதில் உளுந்து 11,500 டன் மற்றும் பச்சைப்பயறு 5,500 டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உளுந்து, பச்சைப்பயறுக்கு நிர்ணயிக்கப்பட்ட சராசரி தரத்தில் இருக்கும் வண்ணம் நன்கு சுத்தம் செய்து ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருக்குமாறு நன்கு காயவைத்து தரமுள்ள உளுந்து கிலோ ஒன்றிற்கு ரூ.56 வீதமும், பச்சைப்பயறு கிலோ ஒன்றிற்கு ரூ.69.75 வீதமும் கொள்முதல் செய்யப்படும். உளுந்து மற்றும் பச்சைப்பயறுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

திருவாரூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தி்ல் நேற்று வேளாண்மை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் நித்யா, கண்காணிப்பாளர் செந்தில்முருகன், மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் உளுந்து, பயறு கொள்முதல் நடந்தது. நேற்று ஒரே நாளில் 10 டன் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

வெளி மார்க்கெட் விலையை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக விற்பனை செய்வதில் அதிக விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

மேலும் செய்திகள்