வீட்டு முன் விளையாடிய போது பரிதாபம்: பின்னோக்கி வந்த லாரி மோதி 3 வயது குழந்தை பலி

வீட்டு முன்பு விளையாடிய 3 வயது குழந்தை, பின்னோக்கி வந்த லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தது.

Update: 2019-04-02 22:50 GMT

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மேலஉப்பிலிகுண்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனிமுருகன். இவர் கொத்தனாராக வேலை செய்து வருகிறார். அவருடைய மகன் அரிகரசுதன் (வயது 3).

இவன் அவ்வப்போது தெருவில் வந்து விளையாடுவது வழக்கம். நேற்று காலையிலும் அவன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த பகுதியில் ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஆபத்து வர இருப்பதை அறியாத அக்குழந்தை, அந்த லாரியின் பின்புறம் சென்று விளையாடிக் கொண்டிருந்தது. இதற்கிடையே குழந்தை நிற்பதை அறியாமல் அதன் டிரைவர், லாரியை பின்புறமாக இயக்கியதாக தெரிகிறது.

இதில் லாரியில் அடிபட்டு குழந்தை பலத்த காயம் அடைந்தது. இந்த சம்பவத்தை அறிந்த அக்கம்பக்கத்தினரும், குழந்தையின் குடும்பத்தினரும் பதறியபடி ஓடிவந்து பார்த்தனர். உடனடியாக குழந்தையை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை அரிகரசுதன் பரிதாபமாக இறந்தது.

வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சற்று நேரத்தில் பிணமாக பார்க்க நேர்ந்ததை எண்ணி, குழந்தையின் பெற்றோரும், குடும்பத்தினரும் கதறியது சோகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடக்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பலியான குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்