தேனி அருகே ராணுவ வீரர் வீடு, வனச்சரக அலுவலகத்தில் திருட்டு
தேனி அருகே ராணுவ வீரர் வீடு மற்றும் வனச்சரக அலுவலகத்தில் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
அல்லிநகரம்,
தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி பாலாஜிநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார். ராணுவ வீரர். இவர், கேரள மாநிலம் கண்ணூர் ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். அங்கு அவர், தனது மனைவி சரண்யாவுடன் வசித்து வருகிறார். பழனிசெட்டிபட்டியில் உள்ள வீட்டில் அவருடைய மாமனார் மின்னல்கொடி (வயது 50) வசித்து வருகிறார்.
கடந்த 29-ந்தேதியன்று இவர், வீட்டை பூட்டிவிட்டு, போடிமெட்டு பகுதியில் உள்ள தனது ஏலக்காய் தோட்டத்துக்கு சென்று விட்டார். அங்கேயே சில நாட்கள் தங்கி தோட்ட வேலைகளை கவனித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் காலையில், பாலாஜி நகரில் உள்ள வீட்டில் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், மின்னல்கொடியிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டை பார்வையிட்டார்.
வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததோடு, பீரோவில் இருந்த 4¾ பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு ஆகியவை திருடு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் மின்னல்கொடி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி அருகே அன்னஞ்சி பைபாஸ் சாலையில் உள்ள வனச்சரக அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள், அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் அங்கிருந்த மின் மோட்டார், எலெக்ட்ரிக்கல் பொருட்கள், வயர்கள் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் வனச்சரக அலுவலர் கர்ணன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.