வாக்குக்காக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்: ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க. நாடகமாடுகிறது தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க. நாடகமாடுகிறது. வாக்குக்காக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக கூறினார்.

Update: 2019-04-02 22:15 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆதரித்து பேசும் பிரசார பொதுக்கூட்டம் தூத்துக்குடி சங்கரப்பேரியில் நேற்று மதியம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரைக்காலில் இருந்து கார் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

தொடர்ந்து நடந்த கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது;-

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வலிமையான தலைமை மிக முக்கியமானது. வலிமையான தலைமை, நிலையான ஆட்சி. இந்த இரண்டையும் கொடுக்க கூடியவர் பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் வலிமையான பாரதத்தை உருவாக்குவார்.

எனவே நாடு வளம் பெற, நாடு செழிக்க நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அதற்கு நமது வெற்றி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். அதே போன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். இரண்டு பேரையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கேட்டு கொள்கிறேன்.

இன்றைக்கு நாடு பாதுகாப்பாக இருக்கிறது. நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் தகுதி வாய்ந்த தலைவர் இந்த நாட்டை ஆள வேண்டும். தகுதியான, வலிமையான, உறுதியான முடிவை எடுக்க கூடிய நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்து எடுக்கப்பட்டு வந்தால் நாடு வளம் பெறும்.

நமது கூட்டணி மக்கள் சக்தி உள்ள கூட்டணி. மக்களுக்கு சேவை செய்யக்கூடிய கட்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து மிகப்பெரிய கூட்டணியாக அமைந்து உள்ளோம். இந்த கூட்டணியை பார்த்து மு.க.ஸ்டாலின் அரண்டு மிரண்டு தோல்வி பயத்தால் ஜூரம் வந்து இன்று மேடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி கொண்டு இருக்கிறார்.

நமது கூட்டணி சார்பில் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். ஏற்கனவே அ.தி.மு.க. 2014-ம் ஆண்டு தேர்தலில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜனதா ஒரு தொகுதியிலும், பா.ம.க. ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் நின்று வெற்றி பெற்ற கூட்டணி நமது மெகா கூட்டணி. ஆகையால் இந்த தேர்தலில் நமக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. வேண்டும் என்றே சில துரோகிகள் செய்த சதியின் காரணமாக இந்த சட்டமன்ற இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆகவே அந்த சதிகாரர்கள், சூழ்ச்சிக்காரர்கள், அவர்களை இந்த தேர்தல் மூலம் வீழ்த்தி நம்முடைய வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40-ம், சட்டமன்ற இடைத்தேர்தலிலும் 18-க்கு 18-ம் நாம் வெற்றி பெறுவோம். இது உறுதி.

அ.தி.மு.க. கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட 2011-ம் சரி, 2016-ம் சரி ஜெயலலிதா இருக்கின்ற போது எல்லா திட்டங்களும் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பா.ஜனதா கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றினர்.

நமது கூட்டணியை பொறுத்த வரைக்கும் தேர்தல் நேரத்தில் அறிக்கப்பட்ட அறிவிப்புகள் முழுவதையும் நிறைவேற்றும் கட்சியாக நாம் இருக்கின்ற காரணத்திற்காக தான் இன்றும் மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கின்றது என்பதை மக்கள் சொல்லி விட்டார்கள்.

ஜெயலலிதா கொண்டு வந்த அத்தனை திட்டங்களையும் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. கிராமத்தில் உழைக்கின்ற விவசாயிகளுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தது ஜெயலலிதா அரசு. குடிமராமத்து என்ற திட்டத்தை கொண்டு வந்து கிராமங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு உள்ளன.

அதே போல் பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அது உபரியாக வெளியேறி வீணாக கடலில் கலக்கின்றது. அந்த நீரை ஆங்காங்கே தடுப்பணை கட்டி உபரி நீரை தேக்கி நிலத்தடி நீரை உயர்த்தி வேளாண் பருவத்துக்கு தேவையாக நீரை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்காக ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

அம்மா இருசக்கர வாகனம் திட்டம் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் அவர் மறைந்த பின்னரும் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இன்று சிறப்பான முறையில் செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம்.

படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். அதற்காக சென்னையில் கடந்த ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை சிறப்பாக நடத்தி அந்த மாநாட்டின் மூலமாக 3 லட்சத்து 431 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, 304 தொழில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இந்த திட்டங்கள் தமிழ்நாட்டில் வரும்போது படித்த இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மறைமுகமாக 5 லட்சம் பேருக்கு கிடைக்கும். 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்த அரசு ஜெயலலிதா அரசு.

தைப்பொங்கல் எல்லா இல்லத்திலும் பொங்க வேண்டும் என்பதற்காக தைப்பொங்கல் பரிசாக ரூ.1,000 எல்லா குடும்ப அட்டைக்கும் தந்த அரசு ஜெயலலிதா அரசு. ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்து அந்த திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கப்பட்ட உடனேயே தி.மு.க.வினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

தேர்தல் நடந்து வருவதால் தேர்தல் ஆணையத்திடம் ரூ.2 ஆயிரம் கொடுக்க கூடாது என்று புகார் தெரிவித்து ஏழை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க கூடாது என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிந்த பின்னர் எல்லா ஏழை குடும்பங்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஏழைக்கு கொடுப்பதைகூட நிறுத்த நினைக்கும் கட்சி இருக்கிறது என்றால் அது தி.மு.க.தான்.

தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களை வைத்து தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வாக்கு சேகரித்து கொண்டு இருக்கிறார். இதனை நான் தெளிவுபடுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்வதற்கு தி.மு.க. ஆட்சி காலத்தில் 243 ஏக்கர் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த காலத்தில் தொழில் துறை அமைச்சராக இருந்தவர் மு.க.ஸ்டாலின். இந்த தொழிற்சாலை உருவாகுவதற்கே துணையாக நின்று கொண்டு தற்போது எங்கள் மீது பழி சுமத்திக்கொண்டு இருக்கிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அப்போது ஆலையை மூட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அவர்கள் நினைத்து இருந்தால் ஆலையை மூடி இருக்கலாம். அப்படி மூடி இருந்தால் தற்போது பொதுமக்கள் பலியாகி இருக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் அதனை ஏன் செய்யவில்லை?. அதன் பின்னர் ஆலை நிர்வாகம் செய்த மேல்முறையீட்டின் படி ஆலை திறக்க உத்தரவிடப்பட்டது. யாரால் இந்த ஆலை இயங்கியது என்பதை வாக்காளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தி.மு.க.வினர் நாடகமாடுகிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்காக ஆலையை மூடியது. ஆனால் தி.மு.க.வினர் வாக்குக்காக பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்துக்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் ரூ.14 கோடியே 25 லட்சம் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம், திருச்செந்தூரில் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு வருகிறது. தாமிரபரணி கருமேனி ஆறு, நம்பியாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எம்.எல்.தேரியில் தண்ணீர் தேக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கப்படும். உடன்குடி அனல்மின் நிலையத்தில் முதற்கட்டமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி மத்திய, மாநில அரசு இணைந்து செயல்படுத்துகின்ற திட்டம். இதில் 31 பணிகள் ரூ.1,905 கோடி மதிப்பீட்டில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் ரூ.435 கோடி மதிப்பீட்டில் 18 பணிகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியில் தங்கு தடையின்றி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் 6 உட்பிரிவினராக இருந்த சமுதாயத்தினரை ஒன்று இணைத்து தேவேந்திர குள வேளாளர் என அழைக்க ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த குழு பரிந்துரையின் பேரில் அந்த மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன். இவர் மிகவும் எளிமையானவர். அவர் ஒரு டாக்டர். தொகுதி வளம் பெற அவருக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

மறைந்த கருணாநிதியின் மகள் கனிமொழியை எதிர்த்து வெற்றி பெறக்கூடிய சக்தி நமது வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் ஒருவருக்கு தான் இருக்கிறது என்று தேர்ந்தெடுத்து அவர் இங்கு நிறுத்தப்பட்டு உள்ளார். பொய் பிரசாரம் செய்து வரும் கனிமொழிக்கு இந்த தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். எனவே தமிழிசை சவுந்தரராஜனை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், மனித உரிமை காக்கும் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் எஸ்.ஆர்.தேவர், த.மா.கா. வடக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல், தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், தே.மு.தி.க. தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், வடக்கு மாவட்ட செயலாளர் அழகர்சாமி, பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், ச.ம.க. தென்மண்டல செயலாளர் சுந்தர், பா.ஜனதா மாநில துணை தலைவர் அரசகுமார், மாவட்ட தலைவர் பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்